

சென்னை: “தமிழகத்தின் உரிமை பறிபோகும் என்பது தெரிந்தும் தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் தமிழகத்துக்கு எதிரானவர்கள். திமுகவின் புதிய நண்பர்கள் யார் என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து தமிழக காங்கிரஸ் சார்பில் மேடவாக்கத்தில் இன்று அமைதிப் பேரணி நடைபெற்றது. மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற பேரணியில், “தொகுதி மறுவரையறை மசோதாவை ரத்து செய்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கருப்பு பலூன்களை ஏந்தியபடி எம்பி. பிரவீன் சக்கரவர்த்தி, நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாணிக்கம் தாகூர் கூறியதாவது: கடந்த ஏப்ரல் 17-ம் தேதி தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டுவருகிறது. தற்போதுள்ள 543 எம்.பி.க்கள் எண்ணிக்கையே போதுமானது. தமிழகத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றைக்கூட அதிகரிக்கவோ, குறைக்கவோ கூடாது. இதே எண்ணிக்கைக்குள் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம்.
தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்தின் உரிமையும் அரசியல் பிரதிநிதித்துவமும் பாதிக்கப்படும். பிரதமர் மோடி தமிழகத்துக்கு இதுவரை நியாயமாக எதையும் செய்யவில்லை; தொடர்ந்து பாரபட்சமாகவே செயல்படுகிறார். அனைத்து கட்சி எம்.பி.க்களையும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அழைத்து ஆலோசனை நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. அதில் பங்கேற்காமல், அந்த முயற்சியை கொச்சைப்படுத்துவது தமிழகத்துக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழகத்தின் உரிமை பறிபோகும் என்பது தெரிந்தும் தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் தமிழகத்துக்கு எதிரானவர்கள். மோடி சொல்வதைக் கேட்பதாக அதிமுகவும், பாமகவும் கூறியுள்ளதால், அவர்கள் ‘நவீன எட்டப்பர்கள்’. ஊரறிந்த எட்டப்பர்கள், ஊரறியாத எட்டப்பர்கள் யார் என்பதை விரைவில் மக்களுக்குக் காட்டுவோம்.
விஜய் கூட்டத்தைக் கூட்ட காங்கிரஸ் அழுத்தம் கொடுத்ததாக அன்புமணி கூறுவது தவறு. யாருடைய அழுத்தத்திற்கும் விஜய் தலைகுனிபவர் அல்ல. அழுத்தம் கொடுப்பது அன்புமணிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தான் பொருந்தும். திமுகவின் புதிய நண்பர்கள் யார் என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.