

பிரவீன் சக்கரவர்த்தி
கடந்த சில வருடங்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் பெயர் பிரவீன் சக்கரவர்த்தி. தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க வேண்டும் என பிள்ளையார் சுழி போட்டதும் இவர்தான். 2026 தேர்தலுக்கு முன்பு நிறைவேறாத இவரின் ஆசை, தேர்தலுக்குப் பின்னர் நிறைவேறியுள்ளது. அத்துடன், இப்போது தவெக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பேற்கவுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை புகழ்ந்து பாராட்டி வந்தார். தேர்தலுக்குப் பின்னர் தவெக – காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமிட்டதும் இவர்தான். இதனால்தான் பதவியேற்பு நிகழ்விலேயே பிரவீன் சக்கரவர்த்தியை ‘நண்பர்’ என அழைத்தார் முதல்வர் விஜய். இப்போது தன் நண்பருக்காக ராஜ்ய சபா இடத்தையும் விட்டுக் கொடுத்திருக்கிறார் அவர்.
சென்னையை பூர்விகமாக கொண்ட பிரவீன் சக்கரவர்த்தி, பொருளாதார வல்லுநராகவும், தரவு மேலாண்மை ஆய்வாளராகவும் அறியப்படுபவர். பிட்ஸ் பிலானியில் பொறியியல் கல்வியும், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்ற பிரவீன் சக்கரவர்த்தி, பிரபல ஐபிஎம், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணியாற்றி உள்ளார்.
2009-ஆம் ஆண்டு முதல் மன்மோகன் சிங் அரசாங்கத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு குழுக்களில் பிரவீன் பணியாற்றியுள்ளார். 2014-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் பல்வேறு கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். அதன்பின்னர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் முழு நேர அரசியல்வாதியாக பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின்னர் பல்வேறு குழுக்களில் இடம்பெற்ற பிரவீன் சக்கரவர்த்தி, 2019 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் முக்கிய பணியாற்றியவர். அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்த போதும், பிரவீன் மீது ராகுல் காந்தி வைத்த நம்பிக்கை குறையவில்லை. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவராக பிரவீன் சக்கரவர்த்தியை நியமித்தார் ராகுல் காந்தி. அதற்கு முன்பாக அப்பதவியை வகித்தவர் சசி தரூர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியின் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் பிரவீன் இருக்கிறார். இதனால் அவரின் கருத்து எப்போதும் உற்று கவனிக்கப்படுவது வழக்கம். மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசியலிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சக்கரவர்த்தி. இதன் காரணமாகவே அவர், கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட முயற்சி செய்தார். காங்கிரஸ் மேலிடம் முழு சம்மதம் தெரிவித்தாலும், திமுக தலைமை ஒப்புக்கொள்ளாததால் அவர் போட்டியிட முடியாமல் போனதாகவும் சொல்லப்படுவதுண்டு.
திமுகவுக்கும், பிரவீனுக்கும் இடையே ஏற்கெனவே ஒரு சலசலப்பு இருந்ததாகவும் பேச்சுகள் இருந்தன. கடந்த திமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் சர்ச்சை ஆடியோ ஒன்று லீக் ஆகி, அரசுக்கு தலைவலியை உருவாக்கியது. அந்த ஆடியோ லீக்கின் பின்னால், பிரவீன் சக்கரவர்த்தியின் கைங்கர்யம் இருந்ததாக பேசப்பட்டது. இதன் காரணமாகவே மயிலாடுதுறையில் அவருக்கு திமுக ‘ரெட் சிக்னல்’ போட்டதாகவும் பேசப்பட்டது.
விஜய் தவெகவை தொடங்கிய பின்னர் திமுக கூட்டணிக்கு எதிராக தமிழக காங்கிரஸில் அவ்வப்போது சலசலப்பு குரல்கள் எழ ஆரம்பித்தன. திமுக, பாஜக, அதிமுகவை ரவுண்டு கட்டி விளாசிய விஜய் எங்கேயும் காங்கிரஸை விமர்சித்ததில்லை. விஜய் - ராகுல் காந்தி இடையே நட்பு பாலமாக பிரவீன் இருந்தார் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே ஸ்டாலினுடனான நெருக்கத்தை ராகுல் குறைத்துக் கொண்டதாகவும் பேச்சு உண்டு.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க, நெருங்க ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோஷத்தை வைத்து திமுகவுக்கு, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் நெருக்கடி கொடுத்தனர். பிரவீன் சக்கரவர்த்தியோ ஒரு படி மேலே போய், ‘உ.பி.யை விட தமிழகம் தான் அதிகம் கடன் வாங்குகிறது’ என பற்ற வைத்தார். ஒருபக்கம் காங்கிரஸ் குழு திமுகவோடு பேச்சு நடத்த, மறுபக்கம் விஜய்யை சந்தித்து அதிர்வலைகளை உருவாக்கினார் பிரவீன். இதனையெல்லாம் ராகுலின் ஆசியோடே பிரவீன் நடத்தியதாகவும் சொல்லப்பட்டது.
காங்கிரஸ் ஏற்படுத்திய திடீர் கலகம் காரணமாக கூடுதல் தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது திமுக. ஆனாலும் கூட, கடைசி வரை திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் பங்கேற்கவே இல்லை. இப்படி ஏகப்பட்ட களேபரங்களுடன் நடந்த தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்தது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
108 இடங்களுடன் ஆட்சியமைக்க முடியாமல் தவெக தவித்தபோது, எந்தக் கேள்வியும் இல்லாமல் முதலில் கைகொடுத்தது காங்கிரஸ். அத்துடன், அடுத்தடுத்த மக்களவை, உள்ளாட்சி தேர்தல்களிலும் தவெகவோடு தான் கூட்டணி என ஒரே போடாக போட்டது காங்கிரஸ்.
காங்கிரஸ் வழியில் அடுத்தடுத்து இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் தவெகவுக்கு ஆதரவளிக்க வரிசை கட்டின. அதுமட்டுமின்றி 60 ஆண்டு காலம் கழித்து தமிழக அமைச்சரவையிலும் இடம்பிடித்து முத்திரை பதித்துள்ளது காங்கிரஸ். கட்சியின் இந்த நகர்வுகளின் பின்னாலும் பிரவீன் சக்கரவர்த்தியின் வியூகங்கள் இருந்தாக சொல்லப்படுகிறது.
உரிய நேரத்தில் தனது ஆட்சிக்கு கைகொடுத்த பிரவீன் சக்கரவர்த்திக்குதான் இப்போது ராஜ்ய சபா சீட் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் முதல்வர் விஜய் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.