

சென்னையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசியல் கட்சி பிரச்சாரத்தில் இசைத்த தப்பாட்ட கலைஞர்கள். படம்: ச.கார்த்திகேயன்
சென்னை: இந்த தேர்தலில் நல்ல வருவாய் ஈட்டிய மகிழ்ச்சியில் உள்ள தப்பாட்டக் கலைஞர்கள் (தப்பு செட்டு), உண்மையில் தேர்தல் என்பது எங்களுக்கு பெரிய திருவிழாதான் என்றனர்.
சென்னையில் கோயில் திருவிழாக்கள், கட்சி விழாக்கள், இல்ல விழாக்கள், இறுதி ஊர்வலம் என எதுவாக இருந்தாலும் முதலில் வந்து நிற்பவர்கள் தப்பாட்டக் குழுவினர்தான்.
இவர்கள் வந்த பிறகுதான் விழாவே களைகட்டுகிறது. நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, சென்னையில் கட்சி வேட்பாளருக்கு முன்பாக இந்த தப்பாட்டக் குழுவினர்தான் சென்றனர்.
அந்த ஓசையைக் கேட்டுத்தான், வேட்பாளர் வருகையை அறிந்து பொதுமக்களும் வீட்டைவிட்டு வெளியில் வந்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாகவே தப்பாட்டக் கலை மாறிவிட்டது. இந்த தேர்தலால் அவர்களுக்கு நல்ல வருவாயும் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக, வேட்பாளர் ஒருவருக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த கலைஞர்கள் சிலர் கூறியதாவது: வழக்கமாக மாதம் சுமார் 7 முதல் 10 நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்கள். அதன் மூலம் ஒரு நபருக்கு, நிகழ்ச்சி ஒன்றுக்கு சுமார் ரூ.800 வருவாய் கிடைக்கும்.
மாதத்துக்கு அதிகபட்சமாக ஒரு நபர் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்க முடியும். மற்ற நாட்களில் வீடுகளுக்கு பெயின்டிங் வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு சென்றுவிடுவோம்.ஆனால், இப்போது தேர்தல் வந்ததால், கடந்த மார்ச் 15-ம் தேதி முதலே நாங்கள் பிசியாகிவிட்டோம்.
தினமும் காலை, மாலை வேலை கிடைத்தது. ஏப்.21-ம் தேதி வரைக்கும் தினமும் வேலை கிடைத்தது. இதற்கு முன்பு தமிழகத்தில் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து விரைவாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும். அதற்கடுத்த கட்டங்களில்தான் பிற மாநிலங்களில் நடக்கும்.
ஆனால், இந்தத் தேர்தலில் தமிழகத்துக்கு தாமதமாக நடத்தப்பட்டதால், சுமார் 35 நாட்கள் தேர்தல் பரபரப்பும், பிரச்சாரங்களும் நீடித்தன.
அதனால் நல்ல வருவாயும் கிடைத்தது. இந்தத் தேர்தலில் ஒவ்வொருவரும் ரூ.45 ஆயிரம் வரை வருவாய் ஈட்டியிருக்கிறோம். உண்மையில் எங்களுக்கு தேர்தல் என்பது ஒரு திருவிழாதான். இவ்வாறு அவர்கள் கூறினர்.