

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை (செப்.8) முதல் செப்.11-ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன் ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை, ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.8) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
செப்.9-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
செப்.10-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
செப்.11-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், செப்.12, 13 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
உள் தமிழகத்தில் நாளை (செப்.8 ) முதல் செப்.11-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன் ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (செப்.8) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழைப் பொழிவு:
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 9 செ.மீ, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சோழவரம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், நீலகிரி மாவட்டம் கேத்தியில் தலா 6 செ.மீ, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, வாலாஜா, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், சென்னை எம்ஜிஆர் நகர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.