காஞ்சிபுரம் அருகே உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் அருகே உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

காஞ்சிபுரம்: மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

ஆந்திர மாநிலத்தில் வழங்கப்படுவது போல, தமிழகத்திலும் ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப மாதாந்திர உதவித்தொகையாக மாதம் ரூ.6,000, கடும் ஊனம் உற்றோருக்கு ரூ.10,000 மற்றும் படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,000 என உயர்த்தி வழங்க வேண்டும்; மாதாந்திர உதவித்தொகை கோரி விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருக்கும் அனைத்து பயனாளிகளுக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும்; வறுமையில் வாடும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளரும் மாநிலக் குழு உறுப்பினருமான வி.முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் பி.பி.பாலாஜி, மாவட்டப் பொருளாளர் வி.அரிகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலாளர் எம்.லோகநாயகி, துணைத் தலைவர்கள் இ.அன்பழகன், ஆர்.ஓம்குமார், துணைச் செயலாளர் கே.அர்ஜூன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சி நகரம், காஞ்சி ஒன்றியம், உத்திரமேரூர், சாலவாக்கம், படப்பை, வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களைச் சேர்ந்த சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் அருகே உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
கோவையில் காலில் காயம்பட்ட யானைக்கு காரமடை அருகே சிகிச்சை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in