

சேலம்: சேலத்தில் தேசிய கொடியை தலைகீழாக கட்டிய உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் 67-வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகளின் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது, கொடி தலைகீழாக மாறி ஏற்றப்பட்டது தெரியவந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் பார்த்திபன், அதிகாரிகளின் தவறைக் கண்டித்தார். உடனடியாக தேசியக் கொடியை இறக்கி தானே முன்னின்று சரியாகக் கட்டச் செய்து மீண்டும் கொடி ஏற்றினார்.
இதுகுறித்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பன், தேசியக் கொடியை தலைகீழாக கட்டிய உடற்பயிற்சி ஆசிரியர் ஜான் ஜமீன்தாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.