‘தவெக சார்பில் போட்டியிடும் துரோகிகளுக்கு பாடம் புகட்டுவீர்’: இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
Updated on: 
2 min read

சென்னை: ‘தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக சார்பில் போட்டியிடும் துரோகிகளுக்கு வாக்காளர்கள் சவுக்கடி கொடுக்க வேண்டும்’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளப் பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருகிறது.

அந்த வகையில், நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், தவெக பல்வேறு தகிடுதத்தங்களை செய்து, ஆட்சி அமைப்பதற்கு போதுமான எண்ணிக்கை இல்லாத நிலையிலும், பிற கட்சிகளின் ஆதரவோடு மைனாரிட்டி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு ரீல்ஸ் மற்றும் சினிமா காட்சிகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேற்றிக் கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களிடம் குறுக்கு வழியில் குதிரை பேரத்தை நடத்தி, வாக்களித்த விரல் மை காய்வதற்குள் ஒரு சில துரோகிகள், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி, தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு தற்போது இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், வாக்களித்த மக்களுக்கும் மாபெரும் துரோகத்தை இழைத்தவர்களே, தற்போது தவெக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் சிறிதும் வெட்கம் இல்லாமல் மீண்டும் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்பதை சகித்துக்கொள்ள முடியாத மக்கள், துரோகிகளுக்கு தொகுதி முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை வலைதளங்களிலும், ஊடகங்களிலும் நாம் அனைவரும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

தவெகவினர் தோல்வி பயத்தில் வாக்காளர்களுக்கு ஆசை வார்த்தைகளைச் சொல்லியும், தவறான வழியில் ஈடுபட்டும், வாக்காளப் பெருமக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபட்டு வருவதை மக்கள் நன்கு அறிவார்கள். கழகத்தின் வெற்றிக்கு துரோகம் இழைத்து, தவெக சார்பில் போட்டியிடும் இவ்விரு வேட்பாளர்களுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

தவெக மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி அரசாக மாற்ற வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு, குறுக்கு வழிகளில் நடத்தப்பட்ட திரைமறைவு செயல்களுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராக உள்ளனர்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இவ்விரு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களிடம், அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டி நான் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டபோது, அவர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வந்து அளித்த வரவேற்பையும், நல்லாதரவையும் பார்க்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதை, கண்கூடாகக் காண முடிந்தது.

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளப் பெருமக்களே, விசுவாசத்திற்கு மூடுவிழா நடத்தி, துரோகத்திற்குப் பெயர்போன, தவெக சார்பில் மீண்டும் போட்டியிடும் துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கின்ற வகையில், வருகின்ற 6.10.2026 அன்று நடைபெற உள்ள இடைத் தேர்தலில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் அன்புச் சகோதரி கணிதா சம்பத்துகும், தாராபுரம் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் பானுமதிக்கும், கழகத்தின் வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை’ சின்னத்தில் உங்களது பொன்னான வாக்குகளை அளித்து,

த.வெ.க, தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இருவரையும் மகத்தான வெற்றிபெறச் செய்திடுமாறு, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள், துரோகத்திற்கும், அதிகார துஷ்பிரயோகத்திற்கும், இனி யாருக்கும் துரோக சிந்தனை வராத வகையில் தக்க பதிலடி கொடுத்தார்கள் என்ற வரலாற்று நிகழ்வைப் படைத்திட வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
“பெண்களை அவதூறாக பேசுபவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது” - தாராபுரத்தில் விஜய் பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in