

தாராபுரம்: "பெண்களை இழிவாகவும் அவதூறாகவும் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களித்து ஆதரிக்கக் கூடாது" என்று தாராபுரம் தேர்தல் பிரச்சாரத்தில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் வலியுறுத்தினார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று (அக்.4) தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் பங்கேற்ற ரோடு ஷோ நடைபெற்றது.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரத்தில் ஹெலிபேட் அமைந்துள்ள மாருதி நகருக்கு பகல் 12.45 மணியளவில் வருகை தந்தார்.
அவரது வருகையை அறிந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு அவரை வரவேற்றனர். அங்கிருந்து பிரச்சார வேனில் ஏறிய விஜய் அங்கு திரண்டிருந்த மக்களை பார்த்து கையசைத்து வணக்கம் தெரிவித்தார். வேட்பாளர் சத்யபாமாவுடன் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் விசில் சின்னத்துக்கு வாக்களிக்கக் கோரி ஆதரவு திரட்டினார்.
தாராபுரம் நகரின் மையப் பகுதியில் திரண்டிந்த மக்களிடையே பேசிய அவர், “கடந்த சில தினங்களுக்கு முன் மதுராந்தகம் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்தேன். அங்குள்ள நம் சொந்தங்கள் எனக்கு சிறப்பாக வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து, தற்போது தாராபுரம் சொந்தங்களைச் சந்திக்க வந்துள்ளேன்.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிப்பது என்பது, பெண்களை அவதூறாகப் பேசுபவர்களை ஆதரிப்பதற்குச் சமம். நமது வீட்டு தாய்மார்களையும், சகோதரிகளையும் தரக்குறைவாகப் பேசுபவர்களை எந்தக் காலத்திலும் மன்னிக்கக் கூடாது.
தேர்தல் ஆதாயத்திற்காக மட்டும் நான் இதனைக் கூறவில்லை. அண்மையில் தாராபுரத்திற்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் ஆகியோர் பேசிய பேச்சுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சகோதரி சத்யபாமா குறித்து அவர்கள் பேசிய வார்த்தைகள் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக அமைந்துள்ளன.
என்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் அதை நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால், நம் வீட்டுப் பெண்களையோ அல்லது நம் வீட்டில் உள்ள அம்மாவையோ, சகோதரிகளையோ இழிவாகப் பேசினால் நிச்சயம் சும்மா இருக்க மாட்டேன்.
திமுகவினரின் இது போன்ற தரமற்ற பிரச்சாரங்கள் இன்று நேற்றல்ல எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இவ்வாறு தான் உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். விசில் சின்னத்தில் வாக்களித்து சகோதரி சத்யபாமாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைச் செய்ய வேண்டும்.” என தெரிவித்தார்.
இன்று வழக்கத்தை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனாலும் வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு விஜய்க்கு வரவேற்பளித்தனர். அப்போது தாராபுரம் அமராவதி ஆற்று பாலம் அருகில் வந்தபோது பிரச்சார வேனில் இருந்து இறங்கிய அவர், விவசாயி நிறுத்தி இருந்த ரேக்ளா வண்டியில் ஏறி அமர்ந்து சில அடி தூரம் அதில் சவாரி செய்தார்.
இதே போல தொண்டர்கள் அளித்த பரிசு பொருள்களை பெற்றபடி அவரின் பிரச்சார பயணம் தொடர்ந்தது. பெண்கள் ஆரத்தி எடுப்பதை அறிந்து அங்கு வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கிச் சென்று ஆரத்தி மரியாதையை ஏற்றுக் கொண்டார். பெண்கள் அவருக்கு திருஷ்டி பொட்டு வைத்த போது, அவரும் பதிலுக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திருஷ்டி பொட்டு வைத்தார். இதைக் கண்டு கூடியிருந்தவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
மூலனூர் செல்லும் வழியில் அலங்கரிக்கப்பட்ட காங்கயம் காளை மாடுகள் நிறுத்தியிருப்பதைக் கண்ட அவர் வாகனத்தில் இருந்து இறங்கி சென்று காளைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். சில இடங்களில் மக்கள் அவர் மீது பூக்களை வாரி இறைத்தனர். இதனால் பிரச்சார வாகனத்தின் முன் பகுதி மலர்களால் நிரம்பி வழிந்தது.
விஜய்யின் தனி பாதுகாவலர் அவ்வப்போது பையில் இருந்த பூக்களை விஜய்யிடம் கொடுக்க அவர் பூக்களை கூடியிருந்த மக்கள் மீது தூவி பரவசப்படுத்தினார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வழி நெடுகிலும் பல லட்சம் பேர் திரண்டு நின்று வரவேற்றது தாராபுரம் தொகுதியின் இறுதிக் கட்ட பிரச்சாரத்தை திசை மாற்றும் நடவடிக்கையாக இருந்தது.