எம்ஆர்பி விலைக்கு மட்டுமே மது விற்பனை: டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு

எம்ஆர்பி விலைக்கு மட்டுமே மது விற்பனை: டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: ‘டாஸ்​மாக் கடைகளில் இனி நிர்​ண​யிக்​கப்​பட்ட விலைக்கே மது​பானங்​கள் விற்​கப்​படும்’ என்று தமிழ்​நாடு அரசு டாஸ்​மாக் பணி​யாளர் சங்​கம் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அந்த அமைப்​பின் தலை​வர் பழனி பார​தி, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்​வைத் துறை அமைச்​சர் விக்​னேஷை சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்​தினோம்.

அப்​போது டாஸ்​மாக் கடைகளில் நிர்​ண​யிக்​கப்​பட்ட எம்ஆர்பி விலை​யை​விட கூடு​தலாக ஒரு ரூபாய்​கூட வசூலிக்​கக்​கூ​டாது என்று அமைச்​சர் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​தார்.

அதையேற்​று, எங்​கள் சங்​கத்​தின்​கீழ் செயல்​படும் 25 மாவட்​டங்​களைச் சேர்ந்த சுமார் 3,500 ஊழியர்​களும் மது​பானங்​களை இனி கூடு​தல் விலைக்கு விற்​ப​தில்லை என முடிவு எடுத்​துள்​ளோம்.

இதற்​கு​முன், சரக்கு இறக்​கும் ​கூலி, உடை​யும் பாட்​டில்​களுக்​கான இழப்பு உள்​ளிட்ட நிர்​வாகச் செல​வு​களை ஊழியர்​களே சமாளிக்க வேண்​டி​யிருந்​தது. கடந்த காலங்​களில் இதற்​கான தீர்வு கிடைக்​காத​தாலேயே பாட்​டிலுக்கு ரூ.10 கூடு​தலாக வசூலித்து அந்​தச் செல​வு​களை சரிசெய்து வந்​தோம். இதன் விவரங்​களை அமைச்​சரிடம் தெரி​வித்​தோம்.

இதையடுத்​து, 25 சதவீத ஊதிய உயர்வு வழங்​கப்​பட்​டதுடன், டிரான்​ஸ்​போர்ட் ஒப்​பந்​த​தா​ரர்​களிடம் பேசி இறக்​கும்​கூலி பிரச்​சினையை​யும் அரசு சரிசெய்​துள்​ளது. செல​வினங்​களை அரசு ஏற்​ற​தால், கூடு​தல் விலை வசூலிப்​பதை நாங்​கள் நிறுத்​திக்​கொண்​டோம்.

மேலும், பூரண மது​விலக்கு கொண்​டு​வரப்​பட்​டால் நாங்​கள் முழு மனதோடு ஆதரிப்​போம். அதே​நேரம், எங்​கள் வாழ்​வா​தா​ரத்​தைக் கருத்​தில்​கொண்டு வேறு துறை​களில் மாற்​றுப்​பணி வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

எம்ஆர்பி விலைக்கு மட்டுமே மது விற்பனை: டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in