

சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 22,877 பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு கடந்த செப்.1-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மேற்பார்வையாளருக்கு ரூ.28,750, விற்பனையாளருக்கு ரூ.26,340, உதவி விற்பனையாளருக்கு ரூ.24,928 வழங்கப்படும். டாஸ்மாக் பணியாளர்களின் சம்பள கணக்கு எஸ்பிஐ வங்கியில் உள்ள நிலையில் அவர்களின் ஊதியத்துக்கு ஏற்ப அவர்களின் கணக்குகளும் மேம்படுத்தப்படுகிறது. அதன்படி ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் நிகர ஊதியம் பெறும் மேற்பார்வையாளர், விற்பனையாளருக்கு கோல்ட் பேக்கேஜ் ஆக மேம்படுத்தப்படுகிறது.
இதில் அவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை விபத்து மரணக் காப்பீடு உள்ளிட்ட சலுகைகளும், உதவி விற்பனையாளருக்கு சில்வர் பேக்கேஜ் ஆக ரூ.30 லட்சம் வரை விபத்து மரணக் காப்பீடு உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும். அதனை சரிபார்த்து அக்.15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.