

சென்னை: 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழும் நிலையில், மே 10ம் தேதிக்கு பின் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மட்டுமே சலுகை பொருந்தும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வராக விஜய் கடந்த மே 10ம் தேதி பொறுப்பெற்றார். ஆட்சி பொறுப்பேற்றவுடன், 500 யூனிட்டுகளுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களிடையே பெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் நுகர்வோர் சிலர் 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். முதல்வர் விஜயின் அறிவிப்புக்கு முன் முதல் 100 யூனிட்கள் இலவசமாகவும், 100 முதல் 200 வரை யூனிட்டுக்கு ரூ.2.35-ம், 200 முதல் 400 வரை யூனிட்டுக்கு 4.70 ரூபாயும், 400 முதல் 500 வரை யூனிட்டுக்கு 6.30 ரூபாயும் கணக்கிடப்படும், புதிய அறிவிப்பின் படி முதல் 200 யூனிட்கள் இலவசம், 200 முதல் 400 வரையும், 400 முதல் 500 வரையும் ஏற்கெனவே உள்ள முறையில் கணக்கிடப்படும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு செய்யப்பட்ட முன் மின் கட்டண கணக்கீட்டில் 200 யூனிட்டுக்கு கீழ் அதாவது 180, 190 யூனிட் பயன்படுத்தியவர்களுக்கும் மின் கட்டணம் வந்துள்ளது. சிறிய தொகை வந்தாலும், அரசு அறிவித்தப்படி ஏன் தங்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் நுகர்வோர் ஒருவர் தான் 244 யூனிட்கள் பயன்படுத்தி இருப்பதாகவும், அதில் 200 யூனிட் தவிர 44 யூனிட்களுக்கு ரூ.207 மின் கட்டணம் வர வேண்டும், அந்த தொகையே மின் வாரியத்தின் செயலில் உள்ள கணக்கீடும் காட்டியது. ஆனால் தனக்கு மின் கட்டணம் 285 ரூபாய் என வந்துள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: முதல்வர் அறிவித்த மே 10-ம் தேதி முதல் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மட்டுமே 200 யூனிட் சலுகை வழங்கப்படும். அதற்கு முன் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு முந்தைய கணக்கீட்டு முறைப்படி மின் கட்டணம் கணக்கிடப்படும். மேலும் மின் கட்டணம் 60 நாட்களுக்கு ஒருமுறை கணக்கிடப்படுகிறது. தற்போது நுகர்வோர் 244 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி இருந்தால் அவருக்கு பழைய கணக்கீடு படி மின் கட்டணம் ரூ.441 வரும்.
ஆனால் அந்த நுகர்வோருக்கு ஏப்.20 முதல் ஜூன் 20 வரை கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்க்கும் போது மே 10-ம் தேதிக்கு பிறகு 40 நாட்களுக்கு சலுகை கிடைக்க வேண்டும். அந்த 40 நாட்களுக்கு பழைய கணக்கீடு படி 100 முதல் 200 யூனிட்டுக்கான ரூ.2.35 கணக்கிட்டு அதை மொத்த தொகையுடன் கழித்து கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செயலியை பொறுத்தவரை இன்றைய நிலைக்கு கணக்கிடும். அதாவது 200யூனிட் முழு சலுகையுடன் கணக்கீட்டு குறைவான தொகையே வெளியிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.