

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதல்வர் விஜய் உள்ளிட்ட தவெக தலைவர்கள் கருத்து தெரிவிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாதிக்கப்பட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்தது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூர் ஒரு முக்கியமான ஊர் என்றும் அங்கு எங்களுக்கு கணக்கு வழக்கு உள்ளது என்றும், அந்தக் கணக்கு வழக்கை முடிக்காமல் விடமாட்டோம். இதற்குப் பதிலடி கொடுக்கப்படும். சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்றும் பேசி உள்ளார். இது போன்று பொது வெளியில் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசு வேலை, கருணைத் தொகை: கரூர் துயர சம்பவ வழக்கின் புலன் விசாரணை நடைபெறும் போதே, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுப் புலன் விசாரணையில் தலையிடுவதாக உள்ளது. இதனிடையே, ஜூலை 10-ஆம் தேதி முதல்வர் விஜய் கரூர் சென்று கூட்டத்தில் பலியான, காயமடைந்த குடும்பத்தாருக்கு அரசு வேலைக்கான உத்தரவுகளை வழங்க இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் சிபிஐ புலன் விசாரணையைப் பாதிக்கும். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகவும் உள்ளது. இதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தனியாகத் தாக்கல் செய்யப்படும்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் புலன்விசாரணையை சிபிஐ நிறைவு செய்யும் வரை, தமிழக முதல்வர் விஜய்யும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்டோரும் எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையிலும், வழக்கு குறித்து பேசவும் தடை விதிக்க வேண்டும்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐயின் புலன்விசாரணையின் நேர்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும். வழக்கில் சாட்சிகளையும் ஆதாரங்களையும் கலைக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.