“அண்ணாமலை வெளியேறிய பிறகு பாஜக வலுவாக உள்ளது” - தமிழிசை

தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்

தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்

Updated on
2 min read

மதுரை: அண்ணாமலை வெளியேறிய பிறகு பாஜக வலுவாக உள்ளதாகவும், ரத்தம் சிந்தி, வேர்வை சிந்தி கட்சியை வளர்த்தவர்கள் பாஜகவில் தான் உள்ளனர் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்த தமிழிசை சவுந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பல்வேறு சவால்களை சந்தித்து தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மீனாட்சியம்மனை தரிசித்து விட்டு வந்து சொல்கிறேன். இந்து மக்களின் உணர்வுகளை, இறைவன், இறைவியை கும்பிடும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இருந்ததால்தான் திமுக ஆட்சியை இழந்தது.

மக்களின் உள்ளுணர்வை, இறையுணர்வை ஏதோ மதக்கலவரம் போல் திசை திருப்புவதை ஒருபோதும் ஏற்கமாட்டோம். இறைவனை அன்புடனும், அருளுடனும் கும்பிடுவதை போலத்தான் திருப்பரங்குன்றத்தில் அன்புடனும், பணிவுடனும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நினைக்கிறோம்.

திருப்பரங்குன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையே தொடரும் என மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறி இருக்கிறார். அவர் அப்படி கூறியதில் ஆச்சரியம் இல்லை. அவருக்கு வெளிச்சம் பிடிக்காது. மின் வெட்டு, இருட்டு தான் பிடிக்கும். அவரது கருத்தை நாம் சகித்துக்கொள்ள முடியாது.

சாமானிய மக்கள், ஏழை மக்களின் உறுதியான உணர்வுகளை மதித்து தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அதை அனுமதிக்கமாட்டோம் என்பது ஆணவத்தின் வெளிப்பாடு. விசில் சத்தம் கொஞ்சம் அதிகமாக கேட்டு விட்டதால், அமைச்சருக்கு பக்தர்களின் குரல் கேட்காமல் இருக்கலாம். ஆனால் பக்தர்களின் குரல் விசில் சத்தத்தை விட உறுதியானது. வலிமையானது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த ஆட்சியின் தவறை தொடர வேண்டாம். மதக்கலவரத்தை தடுக்கிறோம்; அமைதியை நிலைநாட்டுகிறோம் எனச் சொல்லி பக்தர்களின் உணர்வுகளை காயப்படுத்தக்கூடாது. திருப்பரங்குன்றம் மக்களே ஒன்றிணைந்து விளக்கேற்ற வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்துக்களின் பரந்த மனப்பான்மையை மறுபடியும் இடறக்கூடாது. மக்களின் மத உணர்வை கொச்சைப்படுத்துவது தவறு.

மின்வாரியத்தில் 26 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல்போயுள்ளன. ஆனால் சில ஹார்டு டிஸ்க்குகள் தான் காணாமல்போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊழலை காப்பாற்றுவதில் அமைச்சர் ஊக்கமாக உள்ளார். 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக கூறினர். அதற்கு பதில் தனியார் மனமகிழ் மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். டாஸ்மாக் கடைகள் மூடப்படும் இடங்களில் தனியார் மதுபான கூடங்களை திறந்து வருகின்றனர்.

தமிழகத்தில் மக்கள் பாதிக்கப்படுவது இன்னும் குறையவில்லை. கஞ்சா, போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இன்று மட்டும் 7 பாலியல் சம்பவங்கள் செய்தியாகியுள்ளன. 70 வயது பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் 2 பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றங்களை தடுக்க வேண்டிய சிங்கப்பெண்கள் எங்கே போனார்கள் எனத் தெரியவில்லை.

அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் லட்சம் பேர் சேர்ந்துள்ளதை நான் பொருட்படுத்தவில்லை. பாஜகவில் லட்சியவாதிகள் உள்ளனர். ரத்தம் சிந்தி, வேர்வை சிந்தி பாஜகவை வளர்த்தவர்கள் பாஜகவில் தான் உள்ளனர். சுயநலவாதிகள் மட்டுமே சென்றுள்ளனர். பொதுநலவாதிகள் எங்கும் செல்லவில்லை. பாஜக வலுவாக உள்ளது. தாமரையில் ஒரு இதழை கூட யாரும் அசைத்து பார்க்க முடியாது. 2031ல் தாமரை ஆட்சியில் அமரும். கட்சியை விட்டு வெளியேறியவர்களை பற்றி கவலையில்லை. கட்சியில் இருப்பவர்கள் உறுதியாக உள்ளனர்.

பாஜகவின் இன்னொரு முகம் தான் அண்ணாமலை என வன்னியரசு, மாணிக்கம் தாகூர் ஆகியோர் கூறியுள்ளனர். இன்னொரு முகத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை பாஜகவுக்கு இல்லை. காங்கிரஸில் தான் பல முகங்கள் உள்ளன. திமுகவின் முதுகில் குத்தினர். பாஜகவுக்கு ஒரே முகம் தான். வேறு முகத்தை காட்டி பாஜகவுக்கு மாற்று சக்தி தேட வேண்டியதில்லை. அண்ணாமலைக்கு பிரதமர் மோடி, அமித்ஷாவின் ஆதரவு இல்லை.

இவ்வளவு நடந்தும் பாஜக உறுதியாக இருப்பதை பார்த்து சிலர் கதை கட்டுகின்றனர். அண்ணாமலை வெளியேறியதற்கான காரணத்தை அவரிடம் தான் கேட்க வேண்டும். அண்ணாமலை சென்ற பிறகு பாஜக வலுவாக உள்ளது. அவர் வந்ததால் கட்சி வலுவடையவும் இல்லை; அவர் போனதால் வலுவை இழக்கவுமில்லை.

தவெக அரசு ஒரு மாத ஆட்சியை திக்கித் திணறி கடந்துள்ளது. 30 நாள் அரசின் நடவடிக்கை கவலையளிப்பதாக உள்ளது. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா என்பது அவர்கள் ஆட்சி நடத்துவதை பொருத்து அமையும். ஆட்சியின் தலை எழுந்து கம்யூனிஸ்ட்டுகள், விசிக கைகளில் உள்ளது. ஆட்சி நீடிக்குமா என்பதை கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விசிகவை மறைமுகமாக அனுப்பி தற்காலிகமாக முட்டுக்கொடுக்கும் மு.க.ஸ்டாலினிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் தற்போது முட்டுக்கொடுக்கின்றனர். முட்டு கொடுப்பதை விலக்கிவிட்டால் ஆட்சி முடிந்துவிடும். இவ்வாறு தமிழிசை கூறினார்.

<div class="paragraphs"><p>தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்</p></div>
“அரசு மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக்க வேண்டும்” - ராமதாஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in