

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் (ஜூலை 14), நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 16 முதல் 19-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் 17-ம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடும்படியாக எங்கும் மழை பதிவாகவில்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.