

கொலையான மூவர்
சென்னை: “3 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் தமிழக அரசு இனியும் விலகி நிற்காமல் சிபிஐ விசாரணைக்கு ஆணையிடும்படி கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்,” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளர்.
இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநிலம் ஹானூர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது இது தரப்பு மோதலில் அல்ல; அவர்களை கர்நாடக வனத்துறை திட்டமிட்டே கொடூரமாக படுகொலை செய்திருக்கிறது என்பது அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. இவ்வளவுக்கு பிறகும் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் வட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த வனத் துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும், அப்போது வனத்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கர்நாடக வனத்துறை கூறிய நிலையில், அது அப்பட்டமான பொய் என்று கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை செவிமடுக்காத கர்நாடக அரசு, கொல்லப்பட்ட 3 தமிழர்களும் மான் வேட்டைக்காரர்கள் என்று அவதூறு பரப்பியது. அதுமட்டுமின்றி, அவர்கள் மூவரும் வனத்துறையினரை துப்பாக்கிகளால் சுட்டதால் தான் பாதுகாப்புக்காக அவர்களை வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும் பொய் கூறியது. இந்த நிலையில் தான் அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை கசிந்து, கர்நாடக அரசின் பொய் முகமூடியை கிழித்தெறிந்து, நடந்த உண்மை என்பதை ஒட்டுமொத்த உலகிற்கும் உணர்த்தியுள்ளது.
கர்நாடக வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட 3 தமிழர்களில் குமாரின் இடது மார்பிலும், இடுப்புக்கு கீழும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அந்தோணி சாமியின் வலது மார்பிலும், அடி வயிற்றிலும் குண்டு பாய்ந்த காயங்கள் உள்ளன. அவரது விலா எலும்புகளும் நொறுங்கியுள்ளன. இருவரின் உடல் முழுவதும் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்கள் காணப்படுகின்றன.
அவை அனைத்தும் மிகவும் நெருக்கமாக இருந்து சுடப்பட்டவை என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மூன்றாமவரான ஜான்ரோஸ் பீட்டரின் உடற்கூராய்வு அறிக்கை கசியவில்லை என்பதால் அது குறித்த விவரங்கள் தெரியவில்லை.
கர்நாடக காட்டுப் பகுதியில் வனத்துறைக்கும், தமிழர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், அதில் தான் மூவரும் கொல்லப்பட்டதாகவும் கர்நாடக அரசு கூறியிருந்தது. அது உண்மை என்றால், தமிழர்கள் மூவரின் உடல்களிலும் வெகு தொலைவில் இருந்து தான் குண்டுகள் பாய்ந்திருக்க வேண்டும்.
ஆனால், மிகவும் நெருக்கமாக இருந்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதால், அவர்களை வனத்துறையினர் பிடித்து அருகில் நிற்க வைத்து கொடூரமாக சுட்டுக் கொலை செய்திருக்கலாம் என்று யூகிக்கப் படுகிறது. நடுநிலையான விசாரணை நேர்மையாக நடந்தால் மட்டும் தான் இந்த விஷயத்தில் உண்மைகள் வெளிவரும்.
கர்நாடகத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து அங்கு சென்று விசாரித்த பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மை கண்டறியும் குழு, ‘‘3 தமிழர்களும் கர்நாடக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, மிகவும் அருகில் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தது.
இது தொடர்பாக பாமகவின் உண்மை கண்டறியும் குழு தருமபுரியில் செய்தியாளர்களிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை தான் என்பதை மைசூர் மருத்துவமனை அளித்த உடற்கூறாய்வு அறிக்கை உறுதி செய்துள்ளது.
இவ்வளவுக்குப் பிறகும் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தை மூடி மறைப்பதில் தான் கர்நாடக அரசு தீவிரம் காட்டுகிறதே தவிர, உண்மையை ஒப்புக்கொண்டு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையைக் கூட கர்நாடக அரசு வெளியிட மறுக்கிறது. இந்த விவகாரம் பற்றி அதிகாரம் இல்லாத மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிட்டிருப்பதன் மூலம் உண்மையை மூடி மறைப்பதற்கு கர்நாடக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.
கர்நாடக அரசின் இந்த சதித்திட்டத்தை அறிந்திருந்ததால் தான் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கும் கடிதம் எழுதினேன். இதன் பிறகாவது கர்நாடக அரசு அதன் தவறை உணர்ந்து கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும்.
3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனியும் விலகி நிற்காமல், 3 தமிழர்கள் படுகொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடும்படி கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்,” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.