நெய்வேலியில் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்

நெய்வேலியில் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்
Updated on
1 min read

கடலூர்: கடலூர் மாவட்டம், நெய்வேலியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை போலீஸார் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் கடந்த 16-ம் தேதி இரண்டு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில் வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த நரேஷ் குமார் (26) வெட்டிக் கொல்லப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் நெய்வேலியைச் சேர்ந்த ஆனந்தராஜ், வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த கோபி ஆகியோருக்கு இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார், கோபி உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப்பதிந்து 14 பேரைக் கைது செய்தனர்.

இந்நிலையில், முக்கிய குற்றவாளியான கோபி (31) நேற்று நெய்வேலி அருகே புலவன்குப்பம் பகுதியிலுள்ள அரசுக்குச் சொந்தமான முந்திரிக்காட்டில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோபியை போலீஸார் பிடிக்கச்சென்ற போது, கோபி போலீஸாரை அரிவாளால் தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, தற்காப்புக்காக நெய்வேலி டவுன் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் துப்பாக்கியால் சுட்டதில் கோபியின் வலது காலில் குண்டு பாய்ந்தது.

காலில் குண்டு பாய்ந்ததால் காயமடைந்த கோபியை மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த போலீஸார் பாண்டியராஜன், விஜயலாதசோழன் ஆகியோர் என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் புலவன்குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலியில் கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்
ஓணம், மிலாது நபி பண்டிகைகள்: தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in