

அனைத்து வாக்குச்சாவடிகளின் நுழைவுவாயில் பகுதிகளி லும் வேட்பாளர்களின் பெயர் வரிசை பட்டியல் பெரிய சுவரொட்டியாக ஒட்டப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்பாளர்கள் பட்டியலில் இவர் பெயர் 16-வது இடத்தில் வருகிறது. ஆனால், 'நோட்டா' (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) வசதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள துண்டுப் பிரசுரத்தில் 'நோட்டா' என்பது 16-வது இடத்தில் இருந்துள்ளது. இது பெரம்பூர் தொகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் அளித்துள்ள விளக்கம்: சில ஆண்டுகளுக்கு முன்பு 'நோட்டா' வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, வாக்குப் பதிவு இயந்திரத்தின் கடைசி (16-வது) பட்டன் 'நோட்டா' என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டுப் பிரசுரங்களை தேர்தல் ஆணையம் அச்சிட்டது. அதை தவறுதலாக எடுத்து யாரோ தற்போது விநியோகம் செய்துள்ளனர்.
ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறும். அதற்கு மேல் வேட்பாளர் இருந்தால், 2-வது வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும். அந்த வகையில், பெரம்பூரில் 47 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், மொத்தம் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
பதிவு செய்யப்பட்ட கட்சியின் வேட்பாளரான தவெக தலைவர் ஜோசப் விஜய் பெயரின் முதல் எழுத்தான ஜோ. தமிழ் அகர வரிசையின் இறுதியில் வருவதால், பட்டியலில் அவரது பெயர் 16-வதாக உள்ளது.
பெரம்பூரை பொருத்தவரை, 3-வது இயந்திரத்தின் கடைசி பட்டன் நோட்டாவாக இருக்கும். 15-க்கும் குறைவாக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் தான் நோட்டா 16-வது இடத்தில் இடம்பெறும்.