முன்னுதாரணமான தாம்பரம் காவல்துறை: ‘வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ்... தேடி வரும் போலீஸ்’

முன்னுதாரணமான தாம்பரம் காவல்துறை: ‘வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ்... தேடி வரும் போலீஸ்’
Updated on
2 min read

சென்னை: காவல் நிலையம் என்றாலே பலமுறை அலைய வேண்டும், புகார் மனு எழுத வேண்டும் என்ற நிலை தற்போது படிப்படியாக மாறி வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே, செல்போன் மூலம் ஒரே நிமிடத்தில் காவல் சேவைகளைப் பெறும் வகையில் தாம்பரம் காவல்துறை புதிய முயற்சியாக ‘ஏஐ’ வாட்ஸ்அப் சேவை’யைத் தொடங்கி, தமிழக காவல் துறையினருக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறது.

எப்படிப் பயன்படுத்துவது?

பொதுமக்கள் ‘93442 22100’ என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘ஹாய்’ (Hi) என்று குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் இந்த சேவையை உடனடியாகப் பெறலாம். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனை, சந்தேக நபர்களின் நடமாட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாகத் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்கள் குறித்த விவரமும் ரகசியமாக வைக்கப்படும். குற்றச் சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சம்பவ இடத்தின் இருப்பிடத்தை அப்படியே இந்த வாட்ஸ்அப் எண்ணில் பகிர முடியும். இதனால் சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைவாகச் சென்று உடனடி நடவடிக்கை எடுக்க முடியும்.

பகல் மட்டும் அல்லாமல் இரவு நேரங்களிலும் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தங்கள் பயண விவரங்களை இதில் பதிவு செய்துவிட்டால், ஆபத்து காலத்தில் ‘லைவ் லொகேஷன்’ மூலம் ரோந்து போலீஸாரின் உதவியை நொடியில் பெறலாம். தேவையற்ற தாமதமோ அல்லது வழி மாற்றமோ ஏற்பட்டால் காவல்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்.

சைபர் மோசடி: ஆன்லைன் பணமோசடி புகார்கள் மற்றும் தொலைந்துபோன செல்போன்களைக் கண்டுபிடிக்கும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் தங்கள் வீட்டின் தகவலை இதில் பதிவு செய்தால், இரவுநேர ரோந்து போலீஸார் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். இதன்மூலம் திருட்டு மற்றும் கொள்ளையைத் தடுக்க முடியும்.

போக்குவரத்து விதிமீறல்கள், உங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தைக் கண்டறிவது மற்றும் ரோந்து அதிகாரிகளின் எண்களைப் பெறுவது என அனைத்து சேவைகளும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. தாம்பரம் காவல்துறையின் இந்த ‘வாட்ஸ்காப்’ (What’sCop) முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில்

நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து, தாம்பரம் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் கேட்டபோது, “போக்குவரத்து விவகாரம் தொடர்பாக அதிகளவில் புகார்கள் வருகின்றன. இதுதவிர,

பல்வேறு வகையான புகார்கள் மற்றும் உதவிகள் குறித்தும் தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன. சில விவகாரங்கள் எங்கள் அதிகார எல்லைக்குள் வராது. எனவே, சம்பந்தப்பட்டவர்களுக்கு அதுகுறித்து வழிகாட்டுகிறோம். இந்த வாட்ஸ்அப் சேவையை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

காவல்துறையினர் லஞ்சம் பெறுவதை தடுக்கும் வகையில், சென்னை காவல்துறையில் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவை காவல் ஆணையர் அமல்ராஜ் சமீபத்தில் அறிமுகம் செய்தார். இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததையடுத்து, தமிழகம் முழுவதும் இதை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் விரிவுபடுத்தினார்.

அதேபோல், பொதுமக்கள் பாதுகாப்புக்காக தாம்பரம் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கொண்டுவந்துள்ள, ‘ஏஐ வாட்ஸ்அப் சேவை’யை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த டிஜிபி பரிசீலித்து வருகிறார்.

முன்னுதாரணமான தாம்பரம் காவல்துறை: ‘வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ்... தேடி வரும் போலீஸ்’
பொறியியல் துணை கலந்தாய்வு தொடங்கியது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in