

சென்னை: ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக 14 ‘ட்ரோன்கள்’ வாயிலாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னையில், தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி நேற்று கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரிக்கிறது.
ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, தெற்கு ரயில்வே பல்வேறு பாதுகாப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளின்போது, பயணிகள் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும்.
அந்த நேரத்தில் ரயில் நிலையங்கள், ரயில்களில் வழக்கமாக நடக்கும் திருட்டுகள், கடத்தல்களை தடுக்கும் வகையிலும், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக 14 ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு ட்ரோனும், ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவு வரை கண்காணிக்கும். வரும் தீபாவளி பண்டிகைக்கு, 40 சிறப்பு ரயில்கள் 85-க்கும் மேற்பட்ட சர்வீஸ்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதில், சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் சென்னை - கோவை வழித்தடங்களில் அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதற்கான அறிவிப்புகளை அடுத்த மாதம் முதல் தெற்கு ரயில்வே வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.