

சென்னை: அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 14 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூலை 9-ம் தேதி தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள், அதிகாரிகளுடன் போக்குவரத்து துறை அமைச்சர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் முதல் 1.5 கி.மீ.க்கு ரூ.60-ம், அடுத்த ஒரு கி.மீ.க்கு ரூ.30-ம், காத்திருப்பு கட்டணம் நிமிடத்துக்கு ஒரு ரூபாயும், இரவுக் கட்டணம் ஒன்றரை மடங்கு என்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமனதாக சொன்னோம்.
இதை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களும் ஒப்புக்கொண்டனர். போக்குவரத்து துறை மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் புதிதாக குழு அமைத்திருப்பதாக கடந்த 27-ம் தேதி தெரிவித்தனர். இது எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26-ம் தேதி கோட்டை நோக்கி பேரணி செல்ல உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.