

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.படம்: ம.பிரபு
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, திமுக சார்பில் சென்னை வாலாஜா சாலையில் நேற்று அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. ஓமந்தூரார் வளாகத்தில் தொடங்கி, வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில், ‘எண்பது ஆண்டு காலப் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர், நவீனத் தமிழகத்தை உருவாக்கிய சிற்பி. அரசியலும் ஆட்சியும், கலையும் இலக்கியமும், திரையும் நாடகமும், சின்னத்திரையும் சமூக வலைத்தளமும் என அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை.
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவு களில் நிலைத்திருக்கும் கருணாநிதி, உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று. அவர் தான் நமக்கு எல்லாம்.அவரின்றி நாம் இல்லை’ என தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி தனது சமூக வலைதள பக்கத்தில் ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த கருணாநிதி வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தின் உரிமைகளை வென்றெடுப்போம்’ என்று கூறியுள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், ‘திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம். ஆனால், நவீன தமிழகத்தின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது. அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, “இதற்கு விதையிட்டவர் தலைவர் கருணாநிதி” என்று எழுதப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.