

பேரவையில் நேற்று சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசும் முதல்வர் விஜய்.
சென்னை: காவிரி நீர் பங்கீடு, மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். இந்த விவகாரத்தை சட்டப்படி அணுகுவதில் உறுதியாக உள்ளோம். எனினும், பகை நாடுகளே பிரச்சினைகளை பேசித் தீர்க்கும்போது, பக்கத்து மாநிலத்துடன் பேசிப் பார்த்தால் என்ன என்றுதான் கர்நாடகா செல்ல முயற்சித்தேன் என்று பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் விஜய் விளக்கம் அளித்தார்.
காவிரி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து வாதத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:
உதயநிதி: மேகேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? முழு பயிர்க்கடன் தள்ளுபடி என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டு, அரைகுறையாக தள்ளுபடி செய்வது ஏன்? காவிரியில் தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி இல்லாமல் போய்விட்டது. விவசாயிகளுக்கு இதற்கான நிவாரணத் தொகையை அரசு எப்போது தரும்? டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
தவெக ஆட்சி அமைந்தது முதலே மேகேதாட்டு அணை கட்டுவதில் இதுவரை காட்டாத வேகம், தீவிரத்தை கர்நாடக அரசு காட்டி வருகிறது. மத்திய நிதி அமைச்சர், ஜல்சக்தி துறை அமைச்சர் உள்ளிட்டோரை கர்நாடக முதல்வர் சிவகுமார் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசின் அனுமதி தேவைஇல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல்சக்தி இணை அமைச்சர் கூறியுள்ளார். அதன்பிறகு, கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் சிவகுமார் கூட்டியுள்ளார். இப்படி படிப்படியாக பல நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுத்துள்ளது.
தீர்மானம் மட்டும் போதாது: ஆனால், தமிழக முதல்வர் இதற்காக ஒருமுறை மட்டுமே பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். இந்த அவையில் ஜூன் 19-ம் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டும் போதாது. மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக உட்பட பல்வேறு கட்சிகளும் கோரிக்கை வைக்கின்றன. மாநில நலன் என வந்தால், கர்நாடகாவைப் போல, நாமும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் நிற்க வேண்டும். நாங்கள் ஏற்கெனவே கூறியதுபோல, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் டெல்லிக்கு சென்றால்தான் நம் ஒற்றுமையைக் காண்பிக்க முடியும்.
நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பிறகு ஜூலை 28-ம் தேதி 2-வது கடிதத்தை பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ளார். இந்த அரசு ஒரு புது டெக்னிக்கை கடைபிடிக்கிறது. ஏதாவது ஒன்றை செய்வதற்கு முன்பு அதை கசியவிடுகிறார்கள். முதல்வர் விஜய் கர்நாடகா செல்வதாக வேளாண் துறை அமைச்சர் முதலில் தெரிவித்துவிட்டு, பிறகு மறுத்துப் பேசினார்.
பிறகு, அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று 2 அமைச்சர்கள் சொன்னார்கள். பின்னர் 13 பேர் கொண்ட குழு செல்வதாக கூறினார்கள். அதன்பின்னர், ‘தமிழக முதல்வர் இங்கு வரவேண்டாம். தண்ணீர் தரமுடியாது’ என்று கர்நாடக முதல்வர் சொல்லிவிட்டார். உண்மையில், தமிழக முதல்வர் கர்நாடகா செல்ல இருந்தாரா? அப்படியானால் ஏன் செல்லவில்லை?
முழு பயிர்க்கடனை தள்ளுபடி செய்யவேண்டும். விவசாயிகளை சந்தித்து முதல்வர் பேசவேண்டும். எங்கள் ஆட்சியில் 6.5 லட்சம் ஹெக்டேர் குறுவை சாகுபடி நடைபெற்றது. இந்த ஆட்சியில் 1.5 லட்சம் ஹெக்டேர்தான் சாகுபடி நடைபெற்றது. எத்தனை பேருக்கு குறுவைத் தொகுப்பு வழங்கியுள்ளனர் என்பதை தெரிவிக்க வேண்டும்.
அரசியல் செய்யும் எண்ணம் இல்லை
முதல்வர் விஜய்: காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் எங்களுக்கு துளிகூட இல்லை. மேகேதாட்டு விவகாரத்தில் நாம் சேர்ந்து கொண்டுவந்த தீர்மானத்தை பிரதமரிடம் நேர்முக கடிதமாக அளித்துள்ளோம்.
மத்திய ஜல்சக்தி இணை அமைச்சர் மேகேதாட்டு அணை பற்றி முழு விவரங்களை குறிப்பிடவில்லை என தெரிந்ததும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விவரங்களை குறிப்பிட்டு மேகேதாட்டு திட்டத்துக்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்று பிரதமருக்கு அடுத்த நாளே நேர்முக கடிதம் எழுதினோம். எனவே, காவிரி நீர் பங்கீடு, மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை ஒருபோதும் நாங்கள் விட்டுத்தர மாட்டோம்.
அதேநேரம், கர்நாடகாவில் சில அணைகள் கட்ட ஆரம்பித்தபோது இதே அவையில் கடந்த 1969-ம் ஆண்டு விவாதம் நடைபெற்றுள்ளது. அப்போது நீர்வளத் துறை அமைச்சராக இருந்தது யார்? அப்போது அணை கட்ட விட்டது ஏன்? என்றெல்லாம் கேட்டு மலிவான அரசியல் செய்ய விரும்பவில்லை.
அவமானத்தையும் தாங்கத் தயார்: இந்த விவகாரத்தை சட்டப்படி அணுகுவதில் உறுதியாக உள்ளோம். எனினும், ஒரு முயற்சி எடுப்போம் என நினைத்துதான் கர்நாடகா செல்ல முடிவெடுத்தேன். அந்த பயணம் பற்றி யோசித்துக் கேட்டது நான்தான். பகை நாடுகளே பிரச்சினைகளை பேசித் தீர்க்க பார்க்கும்போது, பக்கத்து மாநிலத்துடன் பேசிப் பார்த்தால் என்ன என்றுதான் கர்நாடகா செல்ல முயற்சித்தேன். இதில் ஒருவேளை ஏதேனும் அவமானம் நேர்ந்தால், தமிழக மக்களுக்காக அதையும் தாங்கத் தயாராக இருப்பதாக சொன்னேன்.
குறுவை சாகுபடிக்கு நிவாரணத் தொகுப்பு ஏற்கெனவே கொடுத்துவிட்டோம். அரசியலே நாங்கள்தான் என்று கூறிக்கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது. முன்பின் செய்தித்தாள்களைப் படித்திருந்தால் நாட்டு நடப்பு தெரிந்திருக்கும்.
உதயநிதி: குறுவைத் தொகுப்பு திட்டம் எல்லா அரசுகளும் கொடுப்பதுதான். விவசாயிகள் இப்போது வறட்சி நிவாரணம் கேட்கிறார்கள். இதற்கான வித்தியாசத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பேப்பர் படித்தால் மட்டும் போதாது. அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி, விவசாயிகளிடம் கலந்து பேசி கோரிக்கைகளை தெரிந்துகொள்ள வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதில் அரசுக்கு என்ன தயக்கம்? டெல்டாவை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து நிவாரண நிதியை விரைவில் வழங்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: வறட்சி நிதி குறித்து பொதுவாக செப்டம்பரில்தான் ஆலோசிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.