

கோப்புப் படம்
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகளை பங்கிட்டுக்கொள்வதில் திமுக- காங்கிரஸ் இடையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக முதல்வர் ஸ்டாலினை மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி மாநில திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகனும் உடன் இருந்தார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. ஆனால் புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இழுபறி தொடர்ந்து நீடிக்கிறது. ‘புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை. எனவே எங்களுக்கு கூடுதல் இடங்கள் வேண்டும்’ என காங்கிரஸ் கேட்கிறது. ஆனால் ‘திமுக- காங்கிரஸ் தலா 14 இடங்களை பங்கீட்டு கொள்ளலாம்; இதர 2 இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்கலாம்’ என திமுக சொல்கிறது.
இதனால் கூட்டணியை, தொகுதியை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக திமுக புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர் ஜெகதரட்சகன், புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்து பேசினார். அப்போது ஜெகத்ரட்சகனும் உடனிருந்தார். முன்னதாக தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த போது ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்தார். தற்போது புதுவை விவகாரத்திலும் ப.சிதம்பரம் களமிறங்கி ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய சிதம்பரம், ‘எல்லா இடத்திலும் இப்படி பிடிவாதம் காட்டுவது கூட்டணிக்கு ஆரோக்கியமானதாக இல்லை. புதுச்சேரியில் காங்கிரஸுக்கான இடங்களை குறைத்தால் காங்கிரஸ் தொண்டர்களை வருத்தமடைய செய்யும். அது தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கினால் தொண்டர்களின் ஒத்துழைப்பு பலப்பட்டு தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நம் கூட்டணிக்கு எளிதான வெற்றி கிடைக்கும்’ எனச் சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து காங்கிரஸுக்கு கூடுதல் இடங்களைக் கொடுக்க முதல்வர் பச்சைக்கொடி காட்டியிருப்பதாக சொல்கிறார்கள். இதனால் விரைவில் தொகுதிப்பங்கீடு இழுபறி முடிவுக்கு வரும் என புதுச்சேரி திமுக, காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள்.
டிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை: இதுகுறித்து பேட்டியளித்த திமுக செய்தித் தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், “காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். விரைவில் சுமூக முடிவு எட்டப்படும் என்று நம்புகிறோம். தொகுதி பங்கீடு இழுபறிக்கு எண்ணிக்கைதான் காரணம்.
இயல்பாக எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அதிக எண்ணிக்கையை பெறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அது தவறு கிடையாது. அதேநேரத்தில் வெற்றி வாய்ப்புகளை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். நாம் மிகப்பெரிய எதிரியான பாஜகவை எதிர்த்து போராடுகிறோம் என்று மனதில் கொண்டு களத்தில் நிற்க வேண்டும். அதற்கு சில முடிவுகளை எடுக்க வேண்டும்” என்றார்.