

சீமான் |கோப்புப் படம்
சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால் மீனவ மக்களை திரட்டி நாம் தமிழர் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளதால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று தொடர்ந்து கூறிவரும் தவெக அரசு, கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் ரூ.1,200 கோடிகளை வாரி இறைத்து அவசரகதியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என்றால், சாந்தோம் தேவாலயம், பத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகள், ஏராளமான வணிக நிறுவனங்கள், தொழில் மையங்கள், மீனவ மக்களின் வியாபாரத் தலங்கள் என அதைவிட அதிக இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுவது மக்களின் தேவைக்கா? அல்லது முதல்வரின் தனிப்பட்ட தேவைக்கா?
முதல்வரின் தனிப்பட்ட நலனுக்காக, நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும், சுனாமி ஆபத்தும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்படும் பட்டினப்பாக்கத்தின் 9 கிராம மீனவ மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும். சேலம் எட்டுவழிச்சாலை, பரந்தூர் விமான நிலையம், கடலில் பேனா சிலை போன்றவற்றை அமைக்கவிட மாட்டோம் என்றோம். அமைக்கப்படவில்லை. அதேபோல் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.