

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மற்றும் அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.10 கோடி சொத்து சேர்த்த புகாரில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், அவரது வீடு, திருமண மண்டபம், பண்ணை வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன். இவர் ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார். 2019 - 2023 காலகட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சி செயலராக பதவி வகித்தார்.
அப்போது படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி செயலர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். அந்த காலகட்டத்தில் தங்கபாண்டியன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றது.
அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் தங்கப்பாண்டியன் வீடு, திருமண மண்டபம், வணிக வளாகம், பண்ணை வீடு தோட்டம் ஆகியவற்றை விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆய்வு செய்து, மதிப்பீடு செய்தனர்.
இதனையடுத்து நேற்று தங்கப்பாண்டியன் மற்றும் அவரது மனைவி காசியம்மாள் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.10 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இன்று காலை இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் மும்தாஜ் தலைமையிலாப லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வீர பாண்டியனுக்கு சொந்தமான வீடு, திருமண மண்டபம், பண்ணை தோட்டம் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் 2023 அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட சமூக ஆர்வலரை காலில் எட்டி உதைத்த சம்பவத்தில் சஸ்பென்ட் செய்யபட்டு, 2 ஆண்டுகளாக பணி நீக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வழக்கில் கைது: இந்நிலையில் வன்னியம்பட்டி ஊர் சமுதாய தலைவர் தேர்வில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் உட்பட 4 பேரை வன்னியம்பட்டி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.