சென்னை: பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு டெட் தேர்வில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படவுள்ளதாகவும் அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடமெடுக்கும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஏற்கெனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு கடந்த ஜூலை 4 மற்றும் 5-ம் தேதி நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தாள்-1-ஐ 59,902 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தாள்-2-ஐ ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 617 பேரும் எழுதினர்.
இந்நிலையில், ஆசிரியர்களுக்கு பணிக்காலத்துக்கு ஏற்ப கருணை மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில், சிறப்பு டெட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்தச் சூழலில் கடந்த 1-ம் தேதி இடைக்காலத் தடையை நீக்கிய உயர் நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து, திங்கள் அன்று முடிவுகள் வெளியாகின.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தகுதி சான்றிதழை வரும் வெள்ளிக்கிழமைக்குள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். புதுச்சேரி தேர்வர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி அறிவித்துள்ளார்.
இந்தத் தேர்வில் தாள்-1-ல் 47,594 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தாள்-2-ல் 60,732 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு தேர்விலும் சேர்த்து 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதையடுத்து இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இந்நிலையில், பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக மீண்டும் சிறப்பு டெட் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிட இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, 2026-ம் ஆண்டுக்கான பொது டெட் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று பிஎட் பட்டதாரிகளும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது டெட் தேர்வை பணியில் உள்ள ஆசிரியர்களும் எழுதலாம் என்பதால் சிறப்பு டெட் தேர்வுக்கு பதில் பொது டெட் தேர்வை நடத்த அரசு முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.