

சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நவ.22-ம் தேதி சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதன்மூலம் 9.16 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதால், கடந்த 22 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
இருப்பினும், அண்டை நாடுகளில் போலியோ வைரஸ் பரவல் காணப்படுவதால், நாட்டின் 21 மாநிலங்களில் உள்ள 272 மாவட்டங்களை பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளாக இந்திய போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனைக் குழு அடையாளம் கண்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 6 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், துணை (சிறப்பு) தேசிய போலியோ சொட்டு மருந்து தினத்தையொட்டி, நவ.22-ம் தேதி (ஞாயிறு) செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
இதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், முக்கிய இடங்கள் என மொத்தம் 6,647 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மையங்கள் செயல்படும். 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஏற்கெனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்க வேண்டும்.
அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்குவது அவசியமாகும். இந்த முகாம்கள் மூலம் 9.16 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.