

சென்னை: நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்க ஊதியம் வழங்க ரூ.198 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்), மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), சிறப்பு வட்டாட்சியர்கள் (தேர்தல்) மற்றும் துணை வட்டாட்சியர்கள் (தேர்தல்), மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்களுக்கான தொடர்பு அலுவலர்கள் ஆகியோருக்கு அவர்களின் ஒரு மாத அடிப்படைச் சம்பளம் (மே 1-ம் தேதி வாங்கியது) அல்லது அதிகபட்சம் ரூ.45 ஆயிரம். இதில் எது குறைவோ அந்த தொகை ஊக்கத்தொகையாக அவர்களுக்கு வழங்கப்படும்.
மாவட்ட தேர்தல் பிரிவு: அதேபோல், மாவட்ட தேர்தல் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், பறக்கும்படை மற்றும் வீடியோ கண்காணிப்புக்குழு, வீடியோ பார்வைக்குழு, கணக்கு குழு மற்றும் மாதிரி நடத்தை விதிமுறைக்குழு, உதவி செலவின பார்வையாளர்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு, மண்டல உதவியாளர்கள் ஆகியோருக்கு அவர்களின் ஒரு மாத அடிப்படைச் சம்பளம் அல்லது அதிகபட்சம் ரூ.30 ஆயிரம். இதில் எது குறைவோ அந்த தொகை ஊக்க ஊதியமாக வழங்கப்படும்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), தொடர்பு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் பிரிவு இதர ஊழியர்கள் ஆகியோருக்கு அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.20 ஆயிரம்- இதில் எது குறைவோ அந்த தொகையும், தகவல் தொழில்நுட்பத்துறை சீனியர் புரோகிராமர்கள், புரோகிராமர்கள், உதவி புரோகிராமர்கள் ஆகியோருக்கு ரூ.20 ஆயிரமும், டேட்டா ஆபரேட்டர்கள், பிரிவு எழுத்தர்கள் ஆகியோருக்கு ரூ.7500-ம் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கு அரசு ரூ.198 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.