

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சர்வோதயா மாணவிகள் விடுதியில் புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து தீபாவளியை உற்சாகமாய் கொண்டாடிய மாணவிகள். படம்:எஸ். சத்தியசீலன்
புதுடெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், அனைத்து வீடுகளிலும் அமைதி, மகிழ்ச்சி, வளம் பெருகட்டும் என்று கூறியுள்ளார். தமிழக முதல்வர் விஜய் தனது வாழ்த்தில், அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
தீபாவளியை ஒட்டி டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார். அங்கு நடைபெற்ற தீபாவளி பூஜைகளில் அவர் பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது அனைத்து வீடுகளிலும் அமைதி, மகிழ்ச்சி, வளம் பெருகட்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களோடு இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது எனது வழக்கம். இந்த ஆண்டும் ராணுவ வீரர்களோடு இணைந்து தீபாவளியை கொண்டாடுவேன். இந்த திருநாளில் நாடு முழுவதும் நாம் அன்பை பறைசாற்றுவோம். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக நாம் ஒன்றிணைந்து உழைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
வெற்றி திருநாளாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையில் அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம் என தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் : தீபாவளி நன்னாளில், வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் வளர்ச்சியடைந்த தமிழ்நாடு என்ற இலக்கை எட்டுவதற்கு நமது பங்களிப்பை முழுமையாக வழங்கிட உறுதியேற்போம்.
முதல்வர் விஜய்: இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தீபங்கள் ஒளிர்வது போல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் தீபவாளி நல்வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்: தீமையை வதம் செய்த தீபாவளித் திருநாளில், வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் வகையில் மதநல்லிணக்கத்தின் அடையாளமாக பண்டிகையை கொண்டாடுவோம்.
பாமக தலைவர் அன்புமணி: இந்நன்னாளில், மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும்.
ஈஷா நிறுவனர் சத்குரு: நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் இருள் என்றால் வெளிச்சம் இல்லாமல் இருப்பது. நமது உள்நிலையில் இருள் என்பது தெளிவில்லாமல் இருப்பது. இந்த தீபாவளித் திருநாள் நம் சூழலில் இருக்கும் தீபங்களின் விழாவாக மட்டும் இருந்து விடாமல், தெளிவையும், ஞானத்தையும் நோக்கியப் பயணத்தின் தொடக்கமாக அமையட்டும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஐஜேகே கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன், பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் என்.ஆர்.தனபால், மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.