

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணி காரணமாக, கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பயணிகளின் வசதிக்காக, ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்காக, தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து கடற்கரைக்கும், கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கும் தலா 20 சிறப்பு இலவச பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு இலவச பேருந்துகளின் சேவையை ரயில்வே நேற்று தொடங்கியது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: இந்த பேருந்துகள் தடையின்றி செயல்படவும், அனைத்து முக்கிய வழித்தடங்களில் பயணிகளுக்கு வழிகாட்டும் விதமாகவும் ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மின்சார ரயில் டிக்கெட், மாதாந்திர சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களை பரிசோதிப்பார்கள். இந்த பேருந்து சேவை அலுவலக நேரங்களில் காலை 6.40 மணிமுதல் 9.40 வரை, மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை, 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
இந்த பேருந்துகள் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு கிண்டி, அண்ணாசாலை, சேப்பாக்கம், தலைமைச் செயலகம் வழியாக இயக்கப்பட உள்ளன.
சில பேருந்துகள் கடற்கரையிலிருந்து தி.நகர், எழும்பூர், சென்ட்ரல் வழியாக இயக்கப்படவுள்ளன என்று கூறினர்.