

சண்முகசுந்தரம்
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், கடந்த ஆண்டு ஜூன் 27-ல் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, தனிப்படைக் காவலர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தனிப்படைக் காவலர்கள் 7 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். காவல் மரணம் நிகழ்ந்தபோது மானாமதுரை டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோர் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
சண்முகசுந்தரம் உட்பட 4 பேரும் ஆஜராகுமாறு மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, டிஎஸ்பி சண்முக சுந்தரம் ஆஜராகவில்லை.
இதையடுத்து, சண்முகசுந்தரத்துக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்தும், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐக்கு உத்தரவிட்டும், விசாரணையை பிப். 26-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இவ்வழக்கு தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்வபாண்டி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ரமேஷ்குமார், சிவக்குமார், இளையராஜா ஆகியோர் ஆஜராகினர். ஆனால், டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆஜராகவில்லை.
பின்னர் விசாரணை மார்ச் 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தலைமறைவான சண்முகசுந்தரம் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.