

தர்ஷினி, ஜனனி
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்த மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி புஷ்பா. இவர்களது மகள்கள் தர்ஷினி (3) மற்றும் ஜனனி (2). இவர்கள் அனைவரும் ஏரிக்கரை அருகே உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு உறங்கினர்.
அப்போது வீட்டில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு, உறங்கிக் கொண்டிருந்த புஷ்பா மற்றும் இரு குழந்தைகளையும் கடித்துள்ளது. இதில் குழந்தைகள் தர்ஷினி, ஜனனிக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினரால் நள்ளிரவில், புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர், இரு குழந்தைகளும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தாய் புஷ்பா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.