

சென்னை: திரு.வி.க.நகர் மண்டலத்தில் இயங்கும் 6 படைப்பகங்களை ரூ.1.23 கோடியில் தனியார் மூலம் பராமரிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
புத்தொழில் தொடங்குவோர் குறைந்த கட்டணத்தில் தங்கள் அலுவலகத்தை பயன்படுத்தவும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கும் சூழலை ஏற்படுத்தவும், தமிழக அரசு சார்பில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.2.85 கோடி செலவில் ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையம், கடந்த 2024-ம் ஆண்டு, அப்போதைய முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் அமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்து, சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் முதல்வர் படைப்பகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. திருவிக நகர் மண்டலத்தில் மட்டும் ஜவஹர் நகர், ஜெகந்நாதன் தெரு, கன்னிகாபுரம், ஓட்டேரி, மங்களபுரம், புளியந்தோப்பு ஆகிய 6 இடங்களில் முதல்வர் படைப்பகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றை இதுநாள் வரை மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக பராமரித்து வந்தன.
தவெக ஆட்சி அமைந்த பிறகு, 6 முதல்வர் படைப்பகங்களின் பராமரிப்பு பணியை தனியாரிடம் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்காக, ரூ.2.23 கோடியில் டெண்டர்களை மாநகராட்சி கோரியுள்ளது.
அந்த டெண்டர் ஆவணத்தில் முதல்வர் என்ற சொல் நீக்கப்பட்டு படைப்பகம் என்று மட்டுமே இடம் பெற்றுள்ளந்து. இதனால், பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தனியார்மயம் இல்லை
சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாநகராட்சி மற்றும் சிஎம்சிஏ சார்பில் 24 முதல்வர் படைப்பகங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதில் 15 முதல்வர் படைப்பகங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதர 9 முதல்வர் படைப்பகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த 15 முதல்வர் படைப்பகங்களும், மாநகராட்சியால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதை சிறப்பாக நடத்துவதற்காக, இப்படைப்பகங்களுக்குத் தேவையான பாதுகாவலர், தூய்மைப் பணியாளர், வரவேற்பாளர் உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான பணியாளர்களுக்காக மட்டுமே ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. முதல்வர் படைப்பகங்கள் தனியார் மயமாக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.