பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 7 பழங்குடியின குழந்தைகள் மீட்பு: மீண்டும் பள்ளியில் சேர்த்த ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை

பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 7 பழங்குடியின குழந்தைகள் மீட்பு: மீண்டும் பள்ளியில் சேர்த்த ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை
Updated on
1 min read

செங்கல்பட்டு: செங்கல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி.வி.களத்தூர் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்பு உள்ளது. இங்கு சில குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது காவல்துறையினரின் கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் தேவிகா தலைமையிலான 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை காவலர்கள், சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருடன் இணைந்து குடியிருப்புக்கு நேரில் சென்று, பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 7 குழந்தைகளை கண்டறிந்தனர்.

பின்னர், குழந்தைகளின் பெற்றோரிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த காவலர்கள், தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதால் கல்வி பாதிக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு உள்ளிட்ட வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என விளக்கினர். காவல்துறையினரின் அறிவுரையை ஏற்ற பெற்றோர், குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து 7 குழந்தைகளும் அரசுப் பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர். பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை மீண்டும் கல்வி அமைப்புக்குள் கொண்டு வருவதற்கான காவல்துறையின் முயற்சி, குழந்தைகளின் கல்வி, எதிர்கால நலனை உறுதி செய்யும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 7 பழங்குடியின குழந்தைகள் மீட்பு: மீண்டும் பள்ளியில் சேர்த்த ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை
வீட்டு வசதி வாரியத்தின் ரூ.33 லட்சம் டெண்டர்: குறிப்பிட்ட நிறுவனத்துக்கு தர முயன்ற அதிகாரிகள் மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in