

சென்னை: வீட்டு வசதி வாரியத்தின் ரூ.33 லட்சம் டெண்டரை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு தர முயன்ற அதிகாரிகள் முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், சென்னை அசோக் நகரில் கட்டப்பட்டு வரும் 22 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகளுக்கு முன்பு பெயர் பலகை வைக்க ரூ.33 லட்சம் மதிப்பில் கடந்த 15-ம் தேதி டெண்டர் கோரப்பட்டது.
இந்த டெண்டரை சமர்பிக்க 5 நாட்கள் (ஆக.20-ம் தேதி வரை ) மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டது. பல ஒப்பந்ததாரர்கள் கூடுதல் அவகாசம் கேட்டும் கொடுக்கப்படவில்லை. தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்பந்ததாரர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மட்டுமே இதில் விண்ணப்பிக்க முடியும் என அதிகாரிகள் அலட்சியமாக பதிலளித்தனர். இது தொடர்பான ஆடியோ சமூக வலை தளங்களில் பரவியது.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், பெயர்ப் பலகை வைக்கும் டெண்டரை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்வதாக வீட்டுவசதி வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கண்காணிப்பு பொறியாளர், தலைமைப் பொறியாளரிடம் வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநர் விசாரணை நடத்தினார்.
"செட்டிங் டெண்டர்" அமைத்து குறிப்பிட்ட நிறுவனத்துக்கு அதிகாரிகள் துணை போனது உறுதியானதை தொடர்ந்து, முதல்வர் விஜய் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.