

சென்னை: குதிரை பேரம் தொடர்பான வழக்கில் சம்மன் அனுப்பியும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் நேற்று ஆஜராகாததால், அவர்களை கைது செய்ய தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது, அரசுக்கு எதிராக வாக்களித்தால் ரூ.35 கோடி தருவதாக திமுகவினர் தன்னிடம் பேரம் பேசியதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா, சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் கொடுத்தார். ஆட்சியைக் கவிழ்க்க கார்ப்பரேட் நிறுவனம் மூலம் ரூ.180 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிவு செய்து, யூ-டியூபர் திருநாவுக்கரசு உட்பட 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தின் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் இருப்பது அம்பலமானதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கில் அவர்களும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவர்களது பூர்வீக இல்லத்தில், தந்தை வேலுச்சாமியிடம் போலீஸார் சம்மன் வழங்கினர்.
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேற்று (ஜூலை 6) காலை 10.30 மணிக்கு இருவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் இருவரும் நேற்று ஆஜராகவில்லை.
அவர்களது செல்போன்கள் ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருந்தன. அவர்கள் தரப்பில் வழக்கறிஞர்களும் யாரும் வரவில்லை. எந்த நேரத்திலும் கைது இதையடுத்து, இருவருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பலாமா அல்லது வேறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா என்று போலீஸார் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இருவரும் வெளிநாடுகளுக்குச் செல்வதை தடுக்க ஏற்கெனவே அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கடந்த 6 நாட்களாக கரூரில் முகாமிட்டுள்ள சென்னை தனிப்படை போலீஸார், தற்போது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை, திருச்சி, கோவை மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரியிலும் சந்தேகப்படும் இடங்களில் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
அரசியல் சதி, ஹவாலா பணப் பரிமாற்றம் மற்றும் இதன் பின்னணியில் உள்ள முக்கிய பிரமுர்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சம்மனை புறக்கணித்ததால், இருவரும் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முன்ஜாமீன் மனு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றம்
குதிரை பேர புகார் தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி சி.குமரப்பன் முன்பு இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில், ‘`ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இந்த வழக்கில் மிக தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, இந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் தேவை.
மேலும், இதில் எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதால், எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும்'’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்ஜாமீன் வழக்கை சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பு பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (ஜூலை 8) தள்ளிவைத்தார். அதன்படி, எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.