செங்கோட்டையன் Vs கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்: பேரவையில் நடந்த காரசார விவாதம்

செங்கோட்டையன் Vs கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்: பேரவையில் நடந்த காரசார விவாதம்
Updated on
2 min read

சென்னை: “மீண்டும் திமுக ஆட்சி வரும்” என்று திமுக உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூற, “எம்ஜிஆர் இருந்தபோது நடந்ததைப் போல், முதல்வர் விஜய் இருக்கும் வரை திமுக ஆட்சிக்கு வரவே முடியாது” என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சுகாதாரத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. திமுக உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விவாதத்தை தொடங்கி வைத்து பேசும்போது, “மாறுதல் வேண்டும் என்று மக்களிடம் வாக்கு கேட்டீர்கள். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கொள்கை விளக்க குறிப்பை படித்து பார்த்தேன்.

கடந்த முறை நாங்கள் 400-க்கும் மேற்பட்ட பக்கங்களை வெளியிட்டோம். தற்போது 100 பக்கங்கள் குறைந்துவிட்டன. இதற்கு காரணம், கொள்கை குறைந்துவிட்டதா அல்லது கொள்கைகளில் உங்களுக்கு குறைபாடு இருக்கிறதா?” என்றார்.

அதற்கு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “பக்கங்கள் குறைந்துள்ளதாக சொல்கிறார். லட்சியம் குறையவில்லை. லட்சியத்தை நிறைவேற்றும் ஆட்சியாக, இந்த ஆட்சி இருக்கும்” என்று பதில் அளித்தார்.

அப்போது கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “லட்சியங்கள் குறைந்ததா இல்லையா என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் சொல்லியதில்,எதையும் நிறைவேற்றவில்லை. ஆட்சேபனை இல்லாத நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் சொன்னதாக அமைச்சர் தெரிவித்தார்.

2000-ம் ஆண்டிலேயே ஆட்சேபனை இல்லாத நிலங்களுக்கு பட்டா வழங்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி. கடந்த எங்கள் ஆட்சியில் 5 ஆண்டுகளில் 27 லட்சம் பேருக்கு மனை பட்டா வழங்கியிருக்கிறோம். சென்னை போன்ற மாநகராட்சிகளில் 30, 40 ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு 77 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கியவர் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின். நீங்கள் அறிவித்த எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை” என்றார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் தான் ஆகிறது. முதல்வர் திட்டங்களை வகுத்து கொண்டிருக்கிறார். எங்களின் தூய்மையான ஆட்சி அனைத்தையும் நிறைவேற்றும். 100 நாட்களில் செய்ய வேண்டும் என்று சொல்வது சால பொருத்தமாக இருக்காது. மக்கள் உங்களுக்கு ஓட்டு போடாதற்கு காரணமே, பட்டா கொடுத்தீர்கள். ஆனால், இடம் இல்லை என்பது தான்” என்றார்.

திமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம், “ஆதரத்தை கொடுக்க வேண்டும்” என்றதும், “பட்டா கொடுத்தார்கள். ஆனால், இடம் எங்கு உள்ளது என்று தெரியவில்லை. எங்களிடம் நிறைய மனுக்கள் உள்ளன. ஆட்சி முடியும் நிலையில் அவசரமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டாக்களை வழங்கினீர்கள். அதற்கு பல இடங்கள் இல்லை என்ற ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்களை கொடுக்கிறோம்” என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “ஒரு சில இடங்களில் தவறுகள் இருக்கலாம்” என்றபோது, “முன்னாள் அமைச்சர் ஒப்பு கொண்டார். அதற்கு நன்றி” என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

அதன்பின் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “மீண்டும் திமுக ஆட்சி வரும். அப்படி வரும்போது, அப்பாவை காணோம் என்று சொல்கிறீர்கள். அவர் வரும் நேரத்தில் பல பேர் இங்கே இருக்க மாட்டீர்கள்” என்றார். அதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “என்றைக்கும் உங்கள் ஆட்சி வராது. முதல்வர் விஜய் இருக்கும் வரை, நீங்கள் (திமுக) தலைதூக்க முடியாது” என்று பதில் தந்தார். உடனே கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “இந்த சட்டப்பேரவையில் ஒரே ஒரு திமுக உறுப்பினர் இருந்த வரலாறு உள்ளது. விழுந்த வேகத்தில் எழும் கட்சி தான் திமுக” என்றார்.

அப்போது கே.ஏ.செங்கோட்டையன், “ஆட்சி நடத்திய உங்களை எதிர்க்கட்சியில் அமரும் நிலையை மக்கள் உருவாக்கிவிட்டார்கள். இனிமேல் உருவாக்கி கொண்டே இருப்பார்கள். எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை திமுக வெற்றி பெறவில்லை என்பது தான் வரலாறு” என்றார்.

செங்கோட்டையன் Vs கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்: பேரவையில் நடந்த காரசார விவாதம்
தவெக அரசின் 100 நாள் ஆட்சி: இந்திய கம்யூ. மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in