

படங்கள்: ஜெ.மனோகரன்
கோவை: தவெக அரசின் 100 நாள் ஆட்சி என்பது புதியவர்கள் ஆட்சி. தவெக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாவட்டக் குழுவின் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் இன்று (ஆக.17) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதற்கு, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமை வகித்து பேசினார். அதைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன், “கோவை நகரின் முதன்மை குடிநீர் ஆதாரங்களான சிறுவாணி, பில்லூர் அணைகளை உடனடியாகத் தூர்வாரி, சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
பாண்டியாறு - புன்னம் புழா திட்டத்தையும், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் நகரமான கோவைக்குத் தனி ரயில்வே கோட்டம் அமைக்கப்பட வேண்டும். கோவையில் சென்னை உயர் நீதிமன்றக் கிளையை நிறுவ வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகைகளும், கூடுதல் முன்னுரிமையும் வழங்க வேண்டும்.
கோவையில் சமீப நாட்களில் கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது ஏற்க முடியாத ஒன்று. இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களுக்கு எதிரானவை. வெறும் காவல் துறை நடவடிக்கை மட்டுமன்றி, சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூர்வமான கல்வியின் மூலமே போதை அரக்கனை ஒழிக்க முடியும். அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படங்கள்: ஜெ.மனோகரன்
தமிழக - கர்நாடக எல்லையில் மாடு மேய்க்கச் சென்ற பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எல்லையோரப் பகுதிகளில் வாழும் ஏழை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக எல்லைகளைக் கடப்பது இயல்பான ஒன்று. அவர்களைப் பயங்கரவாதிகளைப் போலச் சுட்டுக் கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத படுகொலை. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும், எல்லையோர மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமும் அளிக்கப்பட வேண்டும்.
காவிரி, மேகேதாட்டு மற்றும் எல்லைப் பிரச்சினைகளின் போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அரசு கலந்தாலோசிக்க வேண்டும்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், மதவாத மற்றும் வகுப்புவாத சக்திகளை வீழ்த்தவுமே இந்திய கம்யூனிஸ்ட் உறுதியோடு செயல்படும்.
தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தாலும், மக்கள் நலனுக்கு மாறான செயல்கள் அல்லது வாக்குறுதி மீறல்கள் நடக்கும்போது எங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தொடர்ந்து பதிவு செய்வோம்.
தவெக அரசின் 100 நாள் ஆட்சி என்பது புதியவர்கள் ஆட்சி. தவெக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என்று வீரபாண்டியன் கூறினார்.