

செல்வப்பெருந்தகை
சென்னை: ‘திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் வந்தால் வரவேற்பீர்களா?’ என்ற கேள்விக்கு, ‘ஜனநாயக சக்திகள் யார் வந்தாலும் வரவேற்போம்’ என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சியினரும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டியுள்ளனர். குறிப்பாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனும் தமிழக அரசை பாராட்டியிருப்பது வரலாற்று சிறப்புமிக்கது.
‘புரட்சி தலைவி ஜெயலலிதாவின் ஆசியோடும், புரட்சி தலைவர் எம்ஜிஆரின் ஆசியோடும் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வருவார்’ என அவர் வாழ்த்தி இருக்கிறார். அனைத்து கட்சிகளும், அதிமுக உறுப்பினரும் சேர்ந்து வாழ்த்தி இருப்பது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன்.
மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் கூட, முதல்வரை பாராட்டியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு கொடுத்திருக்கிறார். காங்கிரஸ் தமிழகத்தின் நலனின் அக்கறை கொண்ட கட்சியாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர், ‘திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் வந்தால் வரவேற்பீர்களா?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘ஜனநாயக சக்திகள் யார் வந்தாலும் வரவேற்போம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனை தமிழக முதல்வர் முடிவு செய்வார். காங்கிரஸ் - திமுக கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது’ என தெரிவித்தார்.