

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாட்டில் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் சிலர், தங்கள் சட்டைகளை கழற்றிவிட்டு இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவிலான செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இந்த உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த உச்சி மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் உள்ள ஒரு அரங்குக்குள் நுழைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், தங்கள் சட்டைகளை கழற்றிவிட்டு இந்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
குறிப்பாக, இந்தியா - அமெரிக்கா இடையே ஏற்பட்டிருக்கும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இளைஞர் காங்கிரசின் தேசிய செயலாளர் கிருஷ்யா ஹரி, பிஹார் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் குந்தன் யாதவ், உத்தரப் பிரதேச இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அஜய் குமார், இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நரசிம்ம யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இளைஞர் காங்கிரசாரின் இந்த நடவடிக்கைக்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ தாக்க உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் நமது வளர்ந்து வரும் உலகளாவிய தலைமையைக் காண்கிறது. ஆனால், இதில் இடையூறை ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் தேர்வாக உள்ளது.
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் நடத்தை மிகவும் துரதிருஷ்டவசமானது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வின் கண்ணியத்தை காங்கிரஸ் புறக்கணிக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய நடவடிக்கை, இந்தியாவின் பிம்பத்தை குறைமதிப்புக்கு உட்படுத்தும் அபாயம் உள்ளது. இத்தகைய நடத்தையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தியா உலக அரங்கில் முன்னேறி வரும் நிலையில், கட்சி ரீதியான இடையூறுகள் எந்த தேசிய நோக்கத்துக்கும் உதவாது. ஜனநாயகத்தில் அரசியல் வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால், அவை ஒருபோதும் நாட்டின் கவுரவத்தை விலையாகக் கேட்கக்கூடாது. சர்வதேச அளவில் நாட்டை நிலைநிறுத்த யார் உறுதிபூண்டுள்ளனர் என்பதையும் தேசிய நலனைவிட அரசியலை யார் முன் வைக்கிறார்கள் என்பதையும் நாட்டு மக்கள் அறிவார்கள்’’ என தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நேரத்தில், காங்கிரஸ் நாட்டை அவமானப்படுத்த எல்லாவற்றையும் செய்கிறது. இது அரசியல் எதிர்ப்பு அல்ல. இது இந்தியாவின் உலகளாவிய பிம்பத்தை நாசப்படுத்தும் முயற்சி. வெறுக்கத்தக்கது’’ என்று கண்டித்துள்ளார்.