

ஆயிரம் அமித் ஷாக்கள், பழனிசாமிகள் சேர்ந்தாலும் ஸ்டாலினின் நல்லாட்சியை தடுத்து நிறுத்த முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வைத்த பழனிசாமி, 2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். அப்போது, அவரை ஊழல் பேர்வழி என அண்ணாமலை விமர்சித்தார். இன்று மீண்டும் அதே பாஜகவிடம் பழனிசாமி சரணடைந்துள்ளார். 2018-ல் தூத்துக்குடியில் 13 பேர் சுட் டுக் கொல்லப்பட்டபோது. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்' என்றார்.
ரத்தக் கறை படிந்த அந்த வரலாற்றை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஊழல் பற்றி பழனிசாமி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது. தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் புகார்: பொள்ளாச்சி பாலியல் புகார் முதல் நிர்மலா தேவி விவகாரம் வரை அதிமுக ஆட்சியில் நடந்த அவலங்களை மூடி மறைக்க முடியாது. திமுக ஆட்சியில் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதை தேசியக் குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் பதவியைப் பெற்ற பழனிசாமிக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்க தகுதி இல்லை.
திமுக அரசு அளித்த 505 வாக்குறுதிகளில் 405-ஐ நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது. பொருளாதாரத்தில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தை 2-ம் இடத்துக்கு உயர்த்திய ஸ்டாலினின் நல்லாட்சியை, ஆயிரம் அமித்ஷாக்கள். பழனிசாமிகள் சேர்ந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே 2026 தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.