

செல்லூர் கே.ராஜு |கோப்புப் படம்
மதுரை: குதிரை பேரம் விவகாரத்தில், அதிமுக முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்துத் தகவலறிந்து காவல் நிலையம் சென்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மன்னனைப் பார்க்க அனுமதிக்காததால் போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா ‘குதிரை பேரம்’ தொடர்பாக பேசிய புகார் குறித்து மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளருமான பி.எம்.மன்னனை மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிகாலை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இது பற்றி தகவலறிந்த அதிமுகவினர் மற்றும் அவரது வழக்கறிஞர்கள், மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் குவிந்தனர். இதனிடையே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, முன்னாள் எம்எல்ஏ அண்ணாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், ‘காவல் நிலையத்துக்குள் உள்ள பி.எம்.மன்னனை பார்க்க வேண்டும்’ என போலீஸாரிடம் கூறினர்.
அதற்கு போலீஸார், ‘சிறிது நேரம் அமருங்கள்; பிறகு அனுமதிக்கிறோம்’ என்று தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் நீண்ட நேரமாக அனுமதிக்க மறுத்ததால் கோபமடைந்த முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், போலீஸார் உடன் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது செல்லூர் ராஜு, “நானும் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்துள்ளேன். மன்னன் தற்போது எங்களது கட்சி நிர்வாகி என்ற முறையில் அவரை சந்திக்க வந்துள்ளேன். என்னை அனுமதிக்க மறுத்து வெளியில் அமர வைக்கிறீர்கள். ஆட்சி மாறியதால், காவல் துறையும் மாறிவிட்டதா? இது என்ன அராஜகம்?” என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி கோபமடைந்தார்.
ஆனாலும் அவரை காவல் துறை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. ’அவரிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறிது நேரம் ஆகட்டும்’ என்று மீண்டும் அவர்களை வெளியில் அமர வைத்துள்ளனர். பிறகு அவரைச் சந்திக்க போலீஸார் அனுமதித்தனர். இந்தச் சம்பவம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.