“தவெக அரசின் ரீல்ஸ் மோகம் எப்போது குறையும்?” - பள்ளி சம்பவத்தில் வானதி சீனிவாசன் காட்டம்

வானதி சீனிவாசன்| கோப்புப் படம்

வானதி சீனிவாசன்| கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ‘அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பள்ளிகளில் என்ன வேலை? கல்விக் கூடங்கள் உங்கள் புகழைப் பரப்பும் மாநாட்டுத் திடல்கள் அல்ல என்பதை உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உணர்த்துங்கள்’ என முதல்வர் விஜய்யை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சிறுவர், சிறுமிகளை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தும் தவெக அரசின் ‘ரீல்ஸ்’ மோகம் எப்போது குறையப் போகிறது?

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள அரசு பள்ளியில் பயிலும் சிறார்களிடம் முதல்வர் ஜோசப் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி, தவெக நிர்வாகிகள் அரசியல் நோக்கத்துடன் பேசும் காணொலி வெளியாகியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தேர்தல் பரப்புரையின்போது சிறார்களிடம், வீட்டிலுள்ள பெரியவர்களைத் தவெகவுக்கு வாக்களிக்கச் சொல்லுமாறு வாக்குக் கேட்ட முதல்வர் விஜய்யின் அணுகுமுறை, தற்போது அவரது கட்சி நிர்வாகிகளால் பள்ளிகளுக்குள்ளும் கொண்டு செல்லப்படுவது அரசியல் மாண்புக்கும் கல்விச் சூழலுக்கும் எதிரானது.

தலைவர்களின் வரலாற்றையும் சாதனைகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைப்பது ஆசிரியர்களின் பொறுப்பு. அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பள்ளிகளில் என்ன வேலை?

முதல்வர் விஜய், கல்விக் கூடங்கள் உங்கள் புகழைப் பரப்பும் மாநாட்டுத் திடல்கள் அல்ல என்பதை உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உணர்த்துங்கள். பள்ளிகள் கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் புனிதமான இடங்கள்; உங்கள் புகழ்பாடும் விளம்பரப் பொதுக்கூட்ட மேடைகள் அல்ல’ எனத் தெரிவிதுள்ளார்.

<div class="paragraphs"><p>வானதி சீனிவாசன்| கோப்புப் படம்</p></div>
தவெக அரசுக்கு எதிரான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in