

மதுரை: தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மேம்பாட்டு நிதி ரூ.28.54 கோடி நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த தீரன் திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மேம்பாட்டு நிதி ரூ.28.54 கோடி நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டு 12 பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தணிக்கை செய்யவும், அதில் முறைகேடு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், முறைகேடு செய்யப்பட்ட நிதியை திரும்ப வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு துறையின் நிதியை இன்னொரு துறைக்கு மாற்றம் செய்வது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தவும், எஸ்சி, எஸ்டி மேம்பாட்டுக்கான நிதியை பிற அரசு துறைகளுக்கு மாற்றம் செய்வதை நிறுத்தவும், இதற்காக உரிய நடைமுறைகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “அரசிடம் கேட்டால் எஸ்சி, எஸ்டி திட்டத்தின் பலனை பெறும் பயனாளிகள் இல்லை என்பார்கள். அனைவரும் நல்ல நிலைக்கு உயர்ந்து விட்டார்களா? பயனாளிகளை கண்டுபிடிக்காமல் நிதியை வேறு துறைக்கு மாற்றுவது எப்படி?” எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், மனு தொடர்பாக எஸ்சி, எஸ்டி நலத்துறை இயக்குநர், நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர், ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு, இதே கோரிக்கை தொடர்பான மற்றொரு மனுவுடன் சேர்த்து டிச. 8-ல் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.