

சென்னை: தமிழக அரசின் ஆண் பணியாளர்களுக்கு முதல் முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு அளிக்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு ஆண் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்கப் பரிசீலிக்க வேண்டுமென்ற கோரிக்கை அரசுப் பணியாளர்களிடம் இருந்து அரசுக்கு வந்துள்ளது.
குழந்தை பிறக்கும் கால கட்டம் என்பது தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானதாகும். இக்கால கட்டத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு வழங்குவதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது.
பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
அதேபோன்று, ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படுவது குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் உதவும்.
எனவே, தமிழக அரசு இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு, அவர்தம் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாட்கள் ‘தந்தையர்மகப்பேறுகால விடுப்பு’ வழங்கியும், அவ்விடுப்பினைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியில் இருந்து 6 மாதங்களுக்குள்ளாகவோ எடுத்துக் கொள்ளவும் உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் வரவேற்பு
அரசு ஆண் ஊழியர்களுக் கான மகப்பேறு விடுப்பு அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.