

பாஜகவில் எனக்கு எந்த பொறுப்பும் வழங்க வில்லை. பொறுப்புகள் இல்லாமல் தேர்தல் களத்தில் எப்படி பணியாற்ற முடியும் என நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை தி.நகரில் பாஜக நிர்வாகி நடிகர் சரத்குமார் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், அகில இந்திய சரத்குமார் தலைமை ரசிகர் நற்பணி மன்றம், நாட்டாமை குடும்பத்தினர், சுப்ரீம் ஸ்டார் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது: இந்தச் சந்திப்பில் நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, பாஜகவில் எனக்கு இதுவரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர். தேர்தல் நெருங்கும் வேளையில், உரிய பொறுப்புகள் இல்லாமல் எப்படித் தேர்தல் களத்தில் பணியாற்ற முடியும் என்பதே அவர்களின் பிரதான கேள்வி.
எங்கள் மாநில நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை நான் மறுக்கவில்லை. அதேநேரத்தில், ‘தலைவருக்கே (சரத்குமார்) பொறுப்பு இல்லாதபோது, எங்களுக்கு மட்டும் பொறுப்புகள் இருந்து என்ன பயன்?’என்ற கருத்தை நிர்வாகிகள் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2024 மார்ச் 12-ம் தேதி நாங்கள் பாஜகவில் இணைந்தோம்.
தேசிய அளவில் எனக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்று அப்போது உறுதியளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. கார் ஓட்டத் தெரிந்தும், ஓட்டுநர் உரிமம் இருந்தும், காரை ஓட்ட அனுமதிக்கவில்லை என்றால் அதில் என்ன நியாயம் இருக்கிறது? கட்சியில் ஒரு பொறுப்பு இருந்தால் மட்டுமே என்னால் முழுமையாகச் செயல்பட முடியும்.
திருச்சி மாநாட்டில் எனது புகைப்படம் கூட மேடையில் இடம்பெறாதது நிர்வாகிகளிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, பாஜக மாநிலத் தலைவருக்கும், தேசியத் தலைமைக்கும் கடிதம் அளிக்கவுள்ளேன். தலைமை எங்களது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஒருவேளை பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்றால், மீண்டும் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி எனது அடுத்தகட்ட நிலைப்பாட்டை அறிவிப்பேன்.
தற்போதைய சூழலில் சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதேபோல், நடைபெறவுள்ள தேர்தலில் நானும், எனது மனைவி ராதிகாவும் போட்டியிடப் போவதில்லை. தற்போது வரை பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது என்ற தெளிவு கூட இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.