

காசியிலிருந்து தமிழகம் வந்த புனித கலசங்களை பெற்றுக் கொண்ட நயினார் நாகேந்திரன். | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: பகவான் குரு ரவிதாஸ் மகாராஜின் 650-வது பிறந்தநாள் விழாவையொட்டி, காசியிலிருந்து புனித கலசங்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டன.
‘பிறப்பு அடிப்படையில் மனிதர்களை பிரிக்கக் கூடாது, அனைவரும் இறைவனின் குழந்தைகள்’ என்று போதித்தவர் பகவான் குரு ரவிதாஸ் மகாராஜ். இவரின் 650-வது பிறந்தநாள் அடுத்த ஆண்டு பிப். 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி கடந்த ஜூலை 29-ம் தேதி தொடங்கி, 2027-ம் ஆண்டு பிப்.20-ம் தேதி வரை இந்தியா முழுவதும் அரசு மற்றும் ஆன்மீக அமைப்புகளால் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன.
அந்த வகையில், அவர் பிறந்த காசியில் இருந்து தி.நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவுக்கு புனித கலசங்கள் கொண்டு வரப்பட்டன. பின்னர் தமிழக பாஜக அலுவலகத்துக்கு புனித கலசங்கள் நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
இவற்றை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பெற்றுக்கொண்டார். பின்னர், அந்த கலசங்களை தமிழகம் முழுவதும் எடுத்து செல்லும் வகையில் மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் எக்ஸ் வலைத்தளத்தில், ‘‘தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த புனித கலசங்கள் கொண்டு செல்லப்படும். பகவான் குரு ரவிதாஸ்ஜியின் போதனைகளை மக்களிடம் பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.