

சென்னை: தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டான்ஃபெட் நிறுவனத்துக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) பொருந்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு வி்ற்பனை இணையமான டான்ஃபெட், எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து உரங்களை கொள்முதல் செய்கிறது, எந்த அடிப்படையின்கீழ் உரங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது, அவற்றின் கொள்முதல் விலை என்ன, விற்பனை விலை என்ன என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பி.ஜோதிபாசு என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு டான்ஃபெட் நிறுவனத்தின் பொது தகவல் அதிகாரி, ‘கூட்டுறவு சங்கங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் வராது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தலப்பாலம் கூட்டுறவு சங்க வழக்கில் உத்தரவிட்டுள்ளதால், இதுதொடர்பான விவரங்களை வழங்க முடியாது’ என மறுப்பு தெரிவித்தார்.
இதை எதிர்த்து மாநில தகவல் ஆணையத்தில் ஜோதிபாசு தொடர்ந்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், டான்ஃபெட் நிறுவனத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ஜோதிபாசு வழக்கு தொடர்ந்தார்.
‘டான்ஃபெட் நிறுவனமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டதுதான். எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கொள்முதல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்க அந்நிறுவன பொது தகவல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜராகி, ‘‘ஒரு கூட்டுறவு அமைப்புக்கு மாநில அரசு கணிசமான நிதியுதவி அளித்தால் அந்த கூட்டுறவு சங்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் வரும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது’’ என வாதிட்டார்.
அதேபோல நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் எம்.எஸ்.பழனிசாமியும் இதே கருத்தை வலியுறுத்தினார். ஆனால், டான்ஃபெட் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சி.விக்னேஷ்வரன், கீதா தாமரைச்செல்வன் ஆகியோர் டான்ஃபெட் நிறுவனத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது என வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன், ‘‘டான்ஃபெட் நிறுவனம் தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ், தமிழக அரசு வழங்கும் நிதியுதவியால் செயல்படுகிறது. அந்த நிறுவனத்தை நிர்வகிக்கும் அதிகாரியையும், பொது தகவல் அதிகாரியையும் தமிழக அரசுதான் நியமி்க்கிறது.
டான்ஃபெட் நிறுவனத்துக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தும். எனவே, மனுதாரர் கோரிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என பொது தகவல் அதிகாரி மறுப்பு தெரிவிக்க முடியாது’’ என கூறி அதுதொடர்பான உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், டான்ஃபெட் நிறுவனத்தின் பொது தகவல் அதிகாரி, மனுதாரர் சட்டப்படி கோரியுள்ள கேள்விகளுக்கான பதில்களை உரிய விவரங்களுடன் 4 வார காலத்துக்குள் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவி்ட்டுள்ளார்.