

சென்னை: சென்னை மயிலாப்பூர் லஸ்சர்ச் சாலையில் கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமான 14 கிரவுண்ட் 910 சதுரஅடி நிலம் 1901-ம் ஆண்டு அமிர்தான்ஜன் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. 2001 முதல் அரசு ஆணைப்படி நியாய வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து அமிர்தான்ஜன் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையால், அமிர்தான்ஜன் நிறுவனத்தின் மேல் முறையீடு, மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிட்டது. இதையடுத்து, 2018-ம் ஆண்டு வரையிலான நிலுவைத் தொகை ரூ.9 கோடியே 74 லட்சத்து 67,151-ஐ வசூலிக்கும் வகையில் ஜப்தி நடவடிக்கை எடுக்க கோயில் செயல் அலுவலர் உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 18-ம் தேதி விப்பு வழங்கப்பட்டு, ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் பணம் செலுத்த கெடு விதிக்கப்பட்டது. ஜப்தி நடவடிக்கைக்கான காலக்கெடு இன்று முடியும் நிலையில், அமிர்தான்ஜன் நிறுவனம் 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் போக ரூ.8,77,20,436-க்கான வரைவோலையை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பி.விஜயகுமார் ரெட்டியிடம் நேற்று வழங்கியது.