

திருவள்ளூர்: திருநின்றவூர் நகராட்சி விசிக பெண் கவுன்சிலர் கொலை விவகாரம் தொடர்பாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் ரவுடியை கொலை செய்ய முயன்ற கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 6 பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ரவுடியான இவர் மீது திருநின்றவூர் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஜோசப்புக்கும், திருநின்றவூர் நகராட்சியின் 26-வது வார்டு கவுன்சிலரான, விசிகவைச் சேர்ந்த கோமதி (28)-க்கும் நட்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, கோமதியை அவரது கணவர் ஸ்டீபன் ராஜ் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த ஸ்டீபன் ராஜ் கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் கோமதியை கத்தியால் வெட்டிக் கொலை செய்தார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்டீபன் ராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஸ்டீபன் ராஜ் தம்பி அஜித், உறவினரான ஜான்சன் என்கிற அந்தோணி ராஜ் ஆகிய 3 பேரை திருநின்றவூர் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிறகு அவர்கள் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.
இந்நிலையில், ரவுடி ஜோசப் வழக்கு தொடர்பாக கடந்த 4 நாட்களாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட ஸ்டீபன் ராஜ், தன் மனைவியை கொலை செய்ய காரணமாக இருந்த ஜோசப்பை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளார்.
இந்தத் தகவல், திருவள்ளூர் எஸ்.பி.சாய் பிரணீத்துக்கு தெரிய வந்ததையடுத்து, எஸ்பியின் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் திருவள்ளூர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடி ஜோசப்பை நீதிமன்ற வளாகத்திலேயே கொலை செய்ய முடிவு செய்து ஓர் ஆட்டோவில் ஸ்டீபன் ராஜ், அவரது உறவினர்கள், நண்பர்கள் என 6 பேர் பட்டாக் கத்திகளுடன் அங்கு காத்திருந்தனர்.
ஆனால், ரவுடி ஜோசப் மதியம் 3 மணியாகியும் நீதிமன்றத்தை விட்டு வெளியில் வராததால், 6 பேர் கும்பல் திருவள்ளூர் அருகே வேடங்கி நல்லூர் பகுதியில் மது அருந்த சென்றனர்.
அப்போது, தனிப்படை போலீஸார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ் உள்ளிட்ட 4 பேர் தப்பியோடிய நிலையில், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (45), பிரபாகரன் (34) ஆகிய இருவர் போலீஸாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து 6 அரிவாள்கள் மற்றும் மிளகாய் பொடி பாக்கெட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, தனிப்படை போலீஸாரிடம் சிக்கிய 2 பேரும் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், அசோக்குமார் (45), பிரபாகரன் (34) ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து, தப்பியோடிய 4 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ஸ்டீபன் ராஜ் (33), திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தவசி (24), சுமன் (29), ஜான்சன் என்கிற அந்தோணி ராஜ் (26) ஆகிய 4 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.